• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஐஏஎஸ் தேர்வில் 2-வது இடம்பெற்ற ராஜேஸ்வரி சுவியின் தாயார் நாகராணி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Mar 7, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கே.வி.எலக்ட்ரிகள்ஸ் எனும் பெயரில் ராஜேஸ்வரியின் தந்தை கடை நடத்தி வருகிறார். தயார் முனைவர் நாகராணி, மதுரை நாகமலையில் உள்ள எஸ்விஎன் கல்லூரி கணிதவியல் துணையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் தம்பி குமாரசெல்வன் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். மதுரை நாகமலையில் உள்ள ராஜேஸ்வரியின் வீட்டில் அவரது தாயார் முனைவர் நாகராணியை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக சந்தித்தோம். அப்போது பேசிய அவர்,

‘இந்த அருமையான தருணத்தைக் கொடுத்த கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் என்னைச் சுற்றியும் உள்ள நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மகளின் கடின உழைப்புக்கு கடவுள் கொடுத்த பரிசாக இதனை நான் எண்ணுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 2018இல் எனது மகள் ராஜேஸ்வரி சுவி டிகிரி முடித்தார். 

கல்லூரி முடித்த கையோடு உடனடியாக ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடெமியில் சேர்த்துவிட்டோம். ஏனென்றால் ஐஏஎஸ்தான் படிக்க வேண்டும் என அவரது இலக்கு இருந்தது. அந்த ஒரே ஆண்டில் முதல் முறையாக முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். முன் தயாரிப்பு இல்லாமல் இறுதித் தேர்வு எழுதக்கூடாது என முடிவெடுத்து அதனைத் தவிர்த்து, முழுவதுமாக பயிற்சியில் இறங்கினார்.

அதற்குப் பிறகு தொடர்ந்து முயன்றார். இடையில் கரோனா பெருந்தொற்றும், அவரது தந்தையாருக்கு உடல்நலமும் குன்றியிருந்தது. அந்த இடையூறுகளையெல்லாம் தாண்டினார். கடினமான உழைப்பு அவரிடமிருந்தது. என்ன ஒரு சூழலிலும் தனது படிப்பை ஒருபோதும் விடாமல் முயற்சி செய்து கொண்டேயிருந்தார். 

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார். அதற்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பும் வந்தது. விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். பிறகு குரூப் 1 தேர்வெழுதி தமிழ்நாடு அளவில் 11ஆம் இடத்தில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். தற்போது தலைமைச் செயலகத்தில் ட்ரெய்னியாக பணியாற்றி வருகிறார். இந்தப் பணியில் இருக்கும்போதே ஊதியமற்ற விடுப்பு எடுத்துக் கொண்டு யுபிஎஸ்சிக்கு கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன் விளைவாக இந்திய அளவில் 2ஆவதாக தேர்வு பெற்றுள்ளார். 

ஒரு தாயாக இதைவிட ஒரு மகிழ்ச்சியான தருணம் ஒன்றில்லை. ராஜேஸ்வரியின் படிப்புக்காக எனது குடும்பத்திலுள்ள அனைவரும் மிகவும் ஒத்துழைப்புத் தந்தனர். என்னுடைய கணவர் குழந்தைகளின் படிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார். திருமணத்திற்குப் பிறகு என்னையும் படிக்க வைத்து, பேராசிரியராக உயர்த்தியவர் என் கணவர் முருகதாஸ். ஆகையால் பிள்ளைகளின் படிப்பின் மீது அவருக்கு அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் இருந்தது. எனது தந்தைக்குப் பிறகு எனது கணவர் 2ஆவது தந்தையாகவே திகழ்ந்தார்.

பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகளை உடனடியாக உள்வாங்கி அதற்கு உரிய மரியாதை தருவதில் ராஜேஸ்வரி சிறந்த பெண். இதனை என்னுடைய மகள் என்பதற்காக நான் கூறவில்லை. தனக்காக பிறரை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். செய்கின்ற வேலை எதுவாக இருந்தாலும் அதில் நேர்த்தி இருக்கும். ஏதேனும் எதிர்மறையாக முடிவுகள் இருந்தால், ஒருநாள் அதன் தாக்கம் இருக்கும். பிறகு அடுத்த முயற்சியைத் தொடங்கிவிடுவார். அம்மாவுக்காகவும், அப்பாவுக்காகவும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் இருந்தது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.7,500 பரிசாகக் கிடைத்ததை மிகவும் பெருமையோடு பேசினார். அச்சமயம் எனது கணவர், ராஜேஸ்வரியிடம் ‘நீ அடுத்த முறை பிரதமரிடம் வாங்குவாய்’ என்று உற்சாகப்படுத்தினார். அவரது கடுமையான உழைப்பினால்தான் தற்போது இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் 2-ஆவது இடம் பெற்று சாதித்துள்ளார். உன்னுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால்தான் அதை நோக்கி நாம் செல்ல முடியும் என்ற அப்துல்கலாம் வரிகள்தான் அவருக்கு உத்வேகத்தைத் தந்துள்ளது. உயர்ந்த லட்சியத்தைக் கொண்டு அதை நோக்கி ஓடத்தொடங்கும் எவரும் சாதிக்க முடியும் என்பதுதான் என்னுடைய கருத்தும். 

என்னுடைய பொண்ணுக்கு இலக்கு ஐஏஎஸ்தான். டிகிரி முடித்ததுமே அதை நோக்கிய பயணத்தை தொடங்கிவிட்டார். 6 வருட கடுமையான உழைப்பிற்குப் பிறகுதான் திண்டுக்கல்லில் உதவி ஆட்சியர் பொறுப்புக் கிடைத்தது. அப்போது தமிழ்நாடு அளவில் 11ஆவது இடம். இப்போது இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் 2-ஆவது இடம். இந்த இரண்டுக்கும் காரணம் அவரது கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும்தான் காரணம். 

பெற்றோருக்கும், உலகத்திற்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது ராஜேஸ்வரியின் ஆசை. அவர்களுக்காக நாம் ஒன்றைச் செய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி அவரிடம் இருக்கும் என நான் நம்புகிறேன். இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தி கிடைத்தபோது, எனது துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் என்னையும் அறியாமல் ‘ஓ…’ என்று கத்திவிட்டேன். அந்த உணர்வை எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. ‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற திருக்குறளின் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. மகள் மட்டுமல்ல… பிள்ளைகள் அனைவருக்கும் இது பொருந்தும்.

தொடர்ந்து உழையுங்கள்… பெற்றோர்களின் பேச்சைக் கேளுங்கள்… பெற்றோரைத் தவிர உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் எவரும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். அனைத்து நல்லது கெட்டதுகளுக்கும் அவர்களே காரணம் என்பதை உணர்ந்து அவர்கள் மூலமாக நீங்கள் உயரத்திற்கு வர முடியும் என்பதை உணர வேண்டும். உங்களின் உணர்வுகளை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதேபோன்று அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். குழந்தைகளுக்காகவே வாழ்கின்றவர்கள்தான் பெற்றோர்கள். 

என்னுடைய மகன் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார். அவருமே தன்னுடைய அக்காவின் படிப்புக்கு பேருதவி புரிந்துள்ளார். மிகவும் பாசமாக இருப்பார். அக்காவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, அவர் சாதிப்பதற்கு ராஜேஸ்வரியின் தம்பி குமாரசெல்வனும் உறுதுணையாக இருந்துள்ளார். உடன்பிறந்த தம்பியின் ஒத்துழைப்பும்கூட ராஜேஸ்வரியின் வெற்றிக்கு மற்றொரு காரணம் என நான் எண்ணுகிறேன்’ என்றார்.