• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காளைகளுக்கு தீவிர பயிற்சிகள்…

ByKalamegam Viswanathan

Dec 30, 2024

மதுரை அவனியாபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகள், காளைகளின் திமிலை அடக்கி வெற்றி காண துடிக்கும் காளையர்கள்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு மற்றும் மாடு பிடி வீரர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, வரும் தைத்திங்கள் முதல் நாள் ஜனவரி 14 அன்று நடைபெறும். அதனைத் தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என வரும் ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும்.

இதற்காக அவனியாபுரம் பெருங்குடி சிந்தாமணி சாமநத்தம் அருகில் உள்ள ஊர்களில் இருந்து காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, மண் முட்டும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் மூலம் டோக்கன் வழங்க ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அவனியாபுரம் பகுதி மக்கள் தங்கள் பகுதி காளைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள்,ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அவனியாபுரம் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மாடுகளை கால்நடை துறை மூலம் ஆய்வு செய்து அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கான தகுதி அடிப்படையில் தேர்வு செய்து உள்ளூர் காளைகளுக்கு போட்டியில் முன்னுரிமை வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இது பற்றி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு சங்க நிர்வாகிகள் கூறும்போது ஆன்லைன் மூலம் ஜல்லிக்கட்டு மாடுகள் முன்பதிவில் நிறைய குறைபாடுகள் உள்ளது என்றும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவற்றை தேர்வு செய்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த முறை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைனில் 24 காளைகளுக்கே டோக்கன் கிடைத்ததாகவும் . இந்தாண்டு கூடுதலாக தங்கள் (அவனியாபுரம்) பகுதி ஜல்லிக்கட்டு மாடுகளை போட்டியில் பங்கேற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளிப்பதுடன் வாடிவாசலில் இருந்து வெளியேறும் வகையில் அங்குள்ள பழமை வாய்ந்த வாடிவாசலில் வைத்து பயிற்சியளிக்கின்றனர்.

வரும் ஜனவரி 14 தைப்பொங்கல் அன்று நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஜல்லிக்கட்டு காளைகளும் ஜல்லிக்கட்டு மாடு பிடித்து மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.