• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 14, 2023

நற்றிணைப் பாடல் 250:

நகுகம் வாராய் பாண! பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
”யாரையோ?” என்று இகந்து நின்றதுவே!

பாடியவர்: மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
திணை: மருதம்

பொருள்:

“எனக்குச் சிரிப்பு வருகிறது. உனக்குச் சிரிப்பு வரவில்லையா? என் மனைவி தேமொழி தன் மகனுக்கு அவன் காலில் அணிந்திருக்கும் கிண்கிணியில் உள்ள பரல் ஒலிக்கும்படி தெருவில் நடைவண்டியில் நடை பயிற்றுவித்துக்கொண்டிருந்தாள். 

என்னைப் பார்த்ததும் அவள் மகன் என்னை “அப்பா” என்றான். அவள் அவன் வாயில் ஒரு அடி போட்டாள். என் நெஞ்சம் அவனைத் தூக்க ஆசைப்பட்டு அவன் அருகில் சென்றேன். அவள் என் மனைவி. மாசற்ற பிறை நிலா போல நெற்றியையும் மணக்கும் கூந்தலையும் கொண்டவள். அவள் வேறு வகையாக உணர்ந்துகொண்டு, ஆளைக் கண்டு மருண்டோடும் மானைப் போல விலகி நின்று
“யாரையோ நீ” என்று வேறுபட்டு வினவுகிறாள். இதனைப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா, பாண? என்று தலைவன் வினவுகிறான். அவன் பரத்தையோடு வாழ்வதால் இந்த ஊடல்.