• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 1, 2023

நற்றிணைப் பாடல் 241:

உள்ளார்கொல்லோ – தோழி! – கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன், வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

பாடியவர் : மதுரைப் பெருமருதனார்
திணை: பாலை

பொருள்:

தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ?