கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.
பாடியவர்: நெடுவெண்ணிலவினார்.
பாடலின் பின்னணி:
தலைவன் இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள். ஆகவே, தோழி நிலவை நோக்கி, “ நீ ஓளி தருவதால்தான் தலைவன் இரவில் வருகிறான். அவர்களின் களவொழுக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், இவ்வாறு நீ நீண்ட நேரம் காய்வது அவர்களின் களவொழுக்கத்திற்கு நீ செய்யும் நல்ல செயலன்று.” என்று கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
நீண்ட நேரம் எறியும் வெண்ணிலவே! கரிய அடிப்பக்கத்தையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த பாறை, பெரிய புலிக்குட்டியைப் போலக் காட்சி அளிக்கும் காட்டில் இரவு நேரத்தில் வரும் தலைவருடைய களவொழுக்கத்திற்கு, நீ நன்மை புரியவில்லை.