• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 46

Byவிஷா

Mar 25, 2025

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.

பாடியவர்: மாமலாடனார்.

பாடலின் பின்னணி:
கணவனைப் பிரிந்து வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். “இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பத்தை அளிக்கிறது. என்னைத் துன்புறுத்தும் இந்த மாலைப்பொழுதும் தனிமையும் என் கணவர் சென்ற நாட்டிலும் இருக்கும். ஆகவே, அவர் விரைவில் திரும்பி வருவார்” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
தோழி, இங்கே, வாடிய அல்லிப்பூவைப் போல் குவிந்த சிறகுகளையுடைய, வீட்டின்கண் தங்கும் குருவிகள், முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, பொதுவிடத்தில் உள்ள சாணத்தின் நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டிலுள்ள ஓர் இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு மாலைநேரத்தில் தங்கியிருக்கின்றன. இதுபோல், பிரிந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதும், தனிமையும், தலைவர் சென்ற நாட்டில், இல்லையோ?