• Fri. Apr 26th, 2024

அப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் படத்தை தயாரித்தேன் -நடிகர் விஷ்ணு விஷாலின் கண்ணீர்ப் பேச்சு

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.(FIR)’.

‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த விழாவில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசும்போது, “இந்த நாள் ரொம்பவும் சந்தோஷமான நாள். மீடியாக்கள் தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் இந்தப் படத்தின் இயக்குநர் மனுதான். உங்களுக்கும், மனுவுக்கும் எனது நன்றி. நான் மனுவிடம் இந்தப் படத்தின் கதை பற்றிக் கேட்டபோது அந்த நேரத்தில் ‘ஃபேமிலிமேன்’ சீரீஸ், ‘மாநாடு’ படமெல்லாம் வெளியாகியிருக்கவில்லை. அவைகள் வந்தபோதும் மனுவை அழைத்து பேசினேன். என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது. ஆனால், நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க மறுத்து, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன். ராட்சசனு’க்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு. ஆனால், அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி.

உதயநிதி ஸ்டாலினுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ‘மைனா’ படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எனது படத்தை விநியோகம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது. ‘நீர்ப்பறவை’ முதல் இப்போதுவரை எனக்குப் பெரிய ஆதரவினை அந்த நிறுவனத்தினர் தந்துள்ளார்கள். அவர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள். ஆனால், இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குக்கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை. அது ஒரு சின்ன கவலையாக எனக்குள் இப்போதும் உள்ளது.

இங்கே பேசிய எல்லோரும் “நான் சரியான நேரத்தில் சம்பளத்தைக் கொடுத்தேன்” என்றார்கள். ஆனால், அதன் பின்னால் இருந்த கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும், இந்தப் படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது, அப்பா வந்து ‘யாரிடமும் கடன் வாங்காதே’ என்று அறிவுறுத்தி அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார்.. அவருக்கு நன்றி…” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *