• Sat. Apr 27th, 2024

“வெப்பம் குளிர் மழை”திரை விமர்சனம்

Byஜெ.துரை

Mar 29, 2024

ஹாஸ்டக் FDFD நிறுவனம் தயாரித்து, பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “வெப்பம் குளிர் மழை”. இத்திரைப்படத்தில் திரவ்,இஸ்மாத் பானு,எம்.எஸ். பாஸ்கர்,ரமா, விஜய லட்சுமி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கின்றனர் ஒரு தம்பதியினர். ஊரும், அந்த பெண்ணின் (இஸ்மாத் பானு), மாமியாரும்(ரமா), அடிக்கடி குத்தி காட்டி பேசி வருகின்றனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது கணவனை(திரவ்), மருத்துவமனை பரிசோதனைக்கு அழைக்கிறார். முதலில் வர மறுத்த கணவன் (திரவ்) தன் மனைவி (இஸ்மத் பானு) வற்புறுத்தலுக்கு பின் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வருகிறார்.

பரிசோதனையின் முடிவில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்து கொள்கிறார். இதனால் நவீன மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமாகி குழந்தை பெற்று கொள்கிறார் இஸ்மத் பானு.

குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மையை தன் கணவனிடம் தெரிவிக்கிறார் பானு. இதன் பிறகு குடும்பத்தில் பிரச்னை வெடிக்கிறது.

இதன்பிறகு அந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டரா? இவர்களுக்குள் நடந்த பிரச்சனை எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதே இப்படத்தின் கதை. கணவன் மனைவி இருவருக்குமிடையே இருக்க வேண்டியது அன்பு மட்டுமே, அன்பின் ஒரு வெளிப்பாடுதான் குழந்தை.

மருத்துவம் எல்லாம் உடலுக்கு மட்டும் தான் உள்ளத்திற்கு அன்பு மட்டும் தான் மருந்து இந்த மருந்து கணவன் மனைவிக்குள் அதிகம் இருக்க வேண்டும்
என்பதை திரைக்கதை மூலம் பேசியுள்ளார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து. திரவ் நடித்த தனது முதல் படத்திலயே சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார்.

நீ ஒரு மலடி என்று திட்டிய மாமியாரிடம் பதிலுக்கு நான் மலடியா? நான் மலடியா?உன் மகனாலத்தான் குழந்தை கொடுக்க துப்பு இல்லை என்று தன் மாமியாரிடம் சொல்லாமல் அதை அடக்கி கத்தி அழும் கோபத்தை வெளிக்காட்டிய இஸ்மாத் பானுவின் நடிப்பு செம. ரமா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கேட்டார் போல் சிறப்பாக நடித்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பை கொடுத்து தான் வரும் காட்சிகளில் சிரிப்பையும் கொடுக்கிறார். ஷங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் கேட்போரின் செவியை குளிர்வித்துள்ளது.

கிராமத்தை நம் கண் முன்னே நிறுத்தி அழகாக காட்டியுள்ளது ப்ரீத்தி ராஜேந்திரன் ஒளிப்பதிவு. மொத்தத்தில் “வெப்பம் குளிர் மழை”தம்பதிகள் பார்க்க வேண்டிய தரமான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *