• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இது மனித உரிமை மீறிய செயல்…லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ByP.Kavitha Kumar

Jan 15, 2025

மாவட்ட பதிவாளர் மீது ஆதாரங்கள் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்குப் பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் உள்ள உள்ளகரத்தில் குறிப்பிட்ட நிலத்தைப் பதிவு செய்யக்கோரி 2005-ம் ஆண்டு ஆலந்தூர் பத்திரப்பதிவுத்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால் 2010-ம் ஆண்டு வரை பதிவு செய்யாமல் நிலுவையில் இருந்த மனுவை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி அறிவுறுத்தலின்படி, மாவட்ட பதிவாளராக இருந்த ஏ.பி ராஜூ விசாரணை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அது புறம்போக்கு நிலம் இல்லை என்பதால், பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்தார். இந்த நிலையில், இந்த பத்திரப்பதிவில் சந்தேகம் இருப்பதாகக் கருதி 7 ஆண்டுகளுக்குப் பின் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அந்த விசாரணையில் மாவட்ட பதிவாளர் ஏ.பி ராஜூ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஏ.பி ராஜூ தொடர்ந்த வழக்கை காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.பி ராஜூ வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன் நேற்று (ஜனவரி. 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, ” கடந்த 1993-ம் ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட இடம் குடியிருப்புகளாக இருந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்ததாக வருவாய்த்துறைக்கு எந்த புகாரும் அளிக்கவில்லை. அதனால், மாவட்ட பதிவாளருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாமல் வழக்கில் சேர்ப்பது மனித உரிமையை மீறிய செயலாகும்” எனக் கூறி ஏ.பி ராஜூ மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.