• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொங்குநாடு கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

BySeenu

Jun 29, 2025

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவரும் விண்வெளிக் குழுவின் உறுப்பினருமான பத்மஸ்ரீ திரு. A.S. கிரண்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார் அவர்தம் உரையில், “உங்களுடைய முயற்சி, ஆசிரியா்களின் வழிகாட்டுதல், பெற்றோர்களின் வாழ்த்துக்கள் இந்த மூன்றும் இணைந்ததன் விளைவே இன்று நீங்கள் பெறவிருக்கும் பட்டம் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் விண்வெளி சாதனைகளையும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் தொலைநோக்குப் பார்வையையும் நினைவு கூர்ந்தார். விண்வெளி ஆய்வுகளின் தொடக்க காலத்தில் இந்தியா சில பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்ததை எடுத்துரைத்து, அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற தாமதமான வளர்ச்சியானது.

இதுவரையில் யாரும் கண்டறியாத புதிய கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையும் செய்ய வழிவகுக்கும் என்றும் 2035 ஆம் ஆண்டு வானில் இந்தியாவின் விண்வெளி நிலையம் அமையும் என்றும் உறுதிபடக் கூறினார். சவால்களை எதிர்கொள்ளாமல் சாதனைகளைச் செய்ய முடியாது என்றும் தோல்வி ஏற்படும் போது அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் ஆராய்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் கூறி, உங்கள் வெற்றியே நாட்டின் வெற்றி” என்று பட்டதாரிகளிடம் குறிப்பிட்டார்.

முன்னதாகக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி அவர்கள் தலைமையுரையாற்றினார். அவா்தம் தலைமையுரையில், “மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் அறிவியல் மற்றும் பொருளாதார வளா்ச்சியை உணர்ந்துள்ள தருணம் இது என்றும் நாட்டுக்கும் மக்களுக்குமான பொற்காலம் என்றும் குறிப்பிட்டார். நமது நூறாவது சுதந்திர நாளில் பாரதம் உலக அரங்கில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் என்றும் அதற்கு இளைஞா்களின் பங்களிப்பு இன்றியமையாதது” என்றும் குறிப்பிட்டார்.
பட்டமளிப்பு விழா நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இப் பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளில் தரவரிசைப் பெற்ற 12 பட்டதாரிகளுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 834 பேருக்கும் முதுநிலை பட்டதாரிகள் 211 பேருக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். விழாவின் நிறைவில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியேற்றனர் நிறைவாக நாட்டுப்பண்ணுடன் பட்டமளிப்பு விழா நிறைவுபெற்றது.