• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாசன் குரூப் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜி.கே.வாசன்

BySeenu

Mar 9, 2025

அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட வாசன் குரூப் அலுவலக கட்டிடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்..,

“நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமாக சார்பில் 12 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மகளிருக்கு கொடுக்க கூடிய முக்கியத்துவத்தை தமாக சரியாக செய்து வருகிறது.

பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் ஆகும். ஆனால், தற்போது பெண்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள பாலியல் பிரச்சனைகளுக்கு அரசு முற்று புள்ளி வைக்க வேண்டும். இந்தியா அதற்கு உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.

கூலி தொழிலாளி பெண்மணி, வீட்டு வேலை செய்பவர்கள் என பெண்கள் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் அதிகம் கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் நடந்து வருகிறது. பெண்கள் அச்சமின்றி வெளியில் செல்ல அரசு வழிவகுக்க வேண்டும்.

பள்ளி கல்லூரிகளில் பெண்களின் முக்கியத்துவத்தையும் பெண்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் குறித்து ஆவண படங்கள் மூலமும் பாடங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து தனியார் அரசு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். 2030க்குள் பாலின சமத்துவத்தை அடைய ஐநா சபை கூறியதை மகளிர் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். மத்திய அரசு மகளிருக்காக கொண்டு வந்துள்ள பல திட்டங்களை என்னால் பட்டியலிட முடியும்.

தமிழக சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. ஆட்சியாளர்களை பொறுத்தவரை மகளிர் பாதுகாப்பு மட்டுமல்லாமல் கள்ளசாராயம், போதை பொருட்களுக்கு முற்று புள்ளி வைக்கின்ற அரசாக செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மனமகிழ் பார்கள் திறப்பது வெட்க கேடு.

பண வசதி உள்ளவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதி உள்ளது. ஆனால் பஸ், போன்ற வாகனங்களில் சென்று படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்க கூடாது. ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பா?

பிற நாட்டு மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் நம் மாணவர்கள் இருக்க வேண்டும். இதற்கு ஏன் ஏற்ற தாழ்வு?

கோவை மாநகராட்சியில் வரி சுமை அதிகரித்து வருகிறது. ஆண்டு தோறும் 6% வரியை உயர்த்துவது கண்டனத்திற்குரியது. இதனை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும்.

கோவையில் பால வேலைகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதனை விரைவு படுத்த வேண்டும். கோவை மக்களின் அச்சம் என்னவென்றால் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது தான். மேலும், சூயஸ் நிறுவனம் நீருக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய வேண்டும். கோவையில் கிரிக்கெட் மைதானம், அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஆகியவற்றை உரிய காலக்கெடுவிற்குள் செய்து தர வேண்டும். சிறுவாணி அத்திக்கடவு திட்டத்தை தனியாருக்கு வழங்கி குழப்பம் ஏற்படுத்த கூடாது.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து தற்போது வரை கொடுக்கபடவில்லை. திமுக அரசை பொறுத்தவரை ஏன் எதற்காக இதனை கையில் எடுக்கிறார்கள் என்று வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாமல் உள்ளது. எனவே மக்களை குழப்ப இதனை கையில் எடுத்துள்ளார்கள். இதனை தென் மாநிலங்களுக்கும் பரப்ப நினைக்கிறார்கள்.

தமாக மூன்று மொழி கொள்கையில் பெற்றோர்களுக்காக மாணவர்களுக்காகவும் பேசுகிறோம். அதனை மறுக்கவோ தடுக்கவோ உரிமை உண்டா? சொகுசு கார்களில் வரும் குழந்தைகளுக்கு ஒரு கணக்கு, சைக்கிளில் வரும் குழந்தைகளுக்கு ஒரு கணக்கா? படிக்கின்ற வயதில் படித்தால் தான் குழந்தைகளுக்கு பதியும். பாரதியார் ஐந்து மொழிகளை படித்துள்ளார். அதனால் தான் யாம் அறிந்து மொழிகளிலே இனிய மொழி தமிழ் என்று கூறியிருக்கிறார்.

நீட் தேர்வு நடந்து கொண்டே தான் இருக்கும். மாணவர்கள் தேர்வாகி கொண்டே தான் இருப்பார்கள். திமுக நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியது சரியா?

தேர்தல் கூட்டணியில் தமாகவை பொறுத்தவரை கூட்டணி வலுபெற வேண்டும் என்று தான் நினைப்போம். நான்கைந்து மாதம் கட்சிகளுக்கு முக்கியமாக தருணம். இதில் கட்சியை வலுபடுத்த வேண்டும்.

பாஜக வுடன் இணைய பிற கட்சிகள் தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது குறித்தான கேள்விக்கு, அது அவரவர் கட்சியை சார்ந்தது. அதைப்பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. எங்கள் கட்சி வேறு எந்த கட்சியை பற்றியும் கூறியது கிடையாது.” என தெரிவித்தார்.