சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த, 4 ஆண்டு தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில், திருட்டு வழக்கில் சிக்கி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவரை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சோதனையில் கண்டுபிடித்து, திருவாரூர் போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நேற்று காலை ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து, பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவர், சார்ஜாவில் இருந்து இந்த விமானத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்தனர். அப்போது பயணி அரவிந்த் மீது, திருட்டு வழக்கு ஒன்று கடந்த 2021 ஆம் ஆண்டு நிலுவையில் இருப்பதாகவும், இவரை குடவாசல் போலீசார் கைது செய்ய தேடி வந்த நிலையில், அரவிந்த் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிய வந்தது. இதை அடுத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அரவிந்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. எனவே அரவிந்த் திருட்டு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து அரவிந்தை, குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அரவிந்த் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்கு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
மேலும் குடியுரிமை அதிகாரிகள், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 4 ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளி, சார்ஜாவில் இருந்து வந்த போது, சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார் என்ற தகவலை தெரிவித்தனர்.
இதை அடுத்து குடவாசல் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் இன்று காலை, சென்னை விமான நிலையம் வந்து, 4 ஆண்டு தலை மறைவு குற்றவாளி அரவிந்தை கைது செய்து, பாதுகாப்புடன் திருவாரூர் மாவட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
திருட்டு வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தலைமறைவு குற்றவாளி, சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.