• Wed. May 1st, 2024

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…

Byகுமார்

Sep 21, 2023

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு முன்னிலையில் பாஜக மாவட்டத் துணை தலைவர் ஜெயவேல் மற்றும் பாஜக, தேமுதிக கட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம்,
சனாதனம் குறித்து அண்ணா சொன்ன வார்த்தைகளை சொல்ல செல்லூர் ராஜுவுக்கு தைரியம் இருக்கிறதா என உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு…
“உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே பேசி வருகிறார். தமிழகத்தில் அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிக்கப்பட்டு விட்டது. அதிமுகவில் சாதி, மத, பேதமின்றி செயல்பட்டு வருகிறோம். அதிமுகவின் அவை தலைவராக ஒரு இஸ்லாமியரை எடப்பாடி பழனிச்சாமி அமர வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ சவால் விடுகிறேன், சனாதனம் பேசுகிற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை வர விடுவார்களா?
ஜெயலலிதா ஒரு பிராமணராக இருந்தாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் அனைவரும் ஒன்றாக உணவு உண்ண வைத்தே சனாதனத்தை ஒழித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்ததால் அவருக்கு அரசியல் வரலாறு தெரியாது.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் சொன்னார். ஆனால் உதயநிதி அமைச்சர் ஆகியுள்ளார். தேர்தல் வேளையில் எதையாவது திமுகவினர் பேசுவார்கள். மகளிர் உரிமைத் தொகை திமுகவுக்கு ஆதரவாக இருக்காது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். அதை திசை திருப்புவதற்காக உதயநிதி இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார்

அதிமுக – பாஜக மோதல் உட்கட்சி விவகாரம், பாஜக மேலிடம் போன் செய்தால் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுவர் என உதயநிதி பேசியது குறித்த கேள்விக்கு…
“மானத்தை இழந்து, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார். அண்ணாமலையில் கருத்து, செயல்பாட்டை தான் எதிர்க்கிறோம். ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். முத்துராமலிங்க தேவரை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். எங்கள் கொள்கை அண்ணாயிசம். எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா ஆகியோர் பிரச்சினை இல்லை, அவர்கள் அதிமுவையும், பொதுச் செயலாளரையும் மதிக்கிறார்கள். அண்ணாமலையை மட்டுமே நாங்கள் விமர்சிக்கிறோம். பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும், பிணக்கும் இல்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *