• Fri. Apr 26th, 2024

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது அதிமுக

பாஜகவை தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக அறிவித்துள்ளது.

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தினை 5-2-2022 (சனிக்கிழமை) அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டியுள்ளார்.

இது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனத்து கட்சி கூடம் நடைப்பெறவுள்ளது. இந்நிலையில், நீட் விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவித்துள்ளது.

மேலும், கூட்டத்தில் பங்கேற்காத போதும், நீட் தேர்வில் இருந்து விலக்கு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அதிமுக விளக்கம் அளித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பரிந்துரைத்த கருத்துகளை தமிழ்நாடு அரசு முறைப்படி செயல்படுத்தவில்லை என்பதால் இன்றைய கூட்டத்தை புறக்கணித்ததாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பினாலும் அது திரும்பி வரும் என்பது நன்றாகத் தெரிந்தும் அதனை வைத்து அரசியல் செய்யலாம் என்பது தப்புக் கணக்கு எனவும் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கண் துடைப்பு என்பதால் பாஜக பங்கேற்காமல் விலகிக் கொள்ளும் எனவும் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *