காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் சென்னையில் காலமானார் அவரது உடலுக்கு ரசிகர்கள்,திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார், அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தினார். ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியை கூட முடித்துவிட்டு வந்தார்.
ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி இருவரும் நடிகர்களாக உள்ளனர். 1985-ம் ஆண்டு கன்னிராசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்…சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார். 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.