ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை. அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெகுநேரம் தூண்டிலில் எந்த மீனும் அகப்படவில்லை.
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் முடிகிறது. அதேநேரம் அவரது மகன் போட்டிருந்த தூண்டிலில் ஏதோ அகப்படுகிறது. இழுத்துப் பார்க்கும் போது ஓரு பெரிய மீன், மிகப்பெரிய மீன், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவு பெரியதாக இருந்தது. ‘வாவ்’ என்று மகன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான். ஆனால் அவனது தந்தை சொல்கிறார்…
“மகனே அந்த மீன் நமக்கு வேண்டாம், அதை மீண்டும் ஏரியிலே விட்டு விடு”
“ஏன் ? “
“நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. அதனால் அது நமக்குச் சொந்தமில்லை.”
“ஜஸ்ட் இப்போது தானே முடிந்தது. அதுவும் இதை யாரும் பார்க்கவே இல்லையே அப்பா !”
“யாரும் பார்க்காவிட்டால் என்ன..? அப்படி ஒரு குற்ற உணர்வுடன் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமா.. யோசித்துப் பார் மகனே”
கலங்கிய கண்களுடன் அந்த மகனும் அந்த மீனை ஏரியிலே விட்டு விடுகிறான்.
ஆண்டுகள் பல ஓடுகின்றன. அதே ஏரிக்கரை. அந்தப் பெரியவர் இல்லை. அந்த மகனும் அவனுடைய மகனும் வந்திருக்கிறார்கள். அன்று நடந்த சம்பவத்தை தன் மகனுக்கு விவரிக்கிறார். சொல்லிவிட்டு,
“அன்று என் தந்தை சொல்லியதைக் கேட்டதால் அந்த மீனை மட்டும் தான் இழந்தேன். ஆனால் அவர் என் மனதில் பதித்த அந்த நேர்மையால் வாழ்க்கையில், வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த நற்பெயர் சாதாரணமானதல்ல.. அன்று நான் அந்த அரிய மீனை எடுத்துப் போயிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை. என்ன கொஞ்சம் அதிகம் பணம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படிச் செய்திருந்தால், அதுவே ஒரு “ருசி காண வைத்த” செயலாக மாறியிருக்கும். ஒரு தவறு செய்வதும், அதை செய்யாமல் இருப்பதும் ஒருவித மனோபாவம் தான். ஆனால் அதை ஒருமுறை செய்யத் தொடங்கிவிட்டால், செய்யப் பழகிவிட்டால் அதை விட முடியாது. பிறகு என்றாவது ஒருநாள் அசிங்கப் பட்டுத்தான் போயிருப்பேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாயா மகனே…”
அந்த மகனுடைய மகனின் களங்கமற்ற அந்த புன்சிரிப்பில் நேர்மை இல்லாமலா இருக்கும் !