பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவன் மகாலிங்கம் மகன் பிரசாத்(32). கஞ்சா கடத்தல், வழிப்பறி உள்பட மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரசாந்தை நீதிமன்ற பிடிவாரண்ட்டின் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீசார், தேடி வந்த நிலையில், பாடலூர் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற பிரசாந்திற்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரசாந்தை மீட்ட போலீசார் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து, மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தலா 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜயராஜ், என்ற ரவுடிக்கும், ஆனந்த் @முருகானந்தம் என்ற ரவுடிக்கும் பெரம்பலூர் போலீசார் கடந்த 11ம் தேதி மாவு கட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க, போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மூன்று ரவுடிகளுக்கு மாவு கட்ட போட்ட சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.