• Fri. Apr 26th, 2024

“பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்”.. செந்தில் பாலாஜிக்கு எதிராக பார் உரிமையாளர்கள் போராட்டம்!

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என கூறி பார் உரிமையாளர்கள் எம்.ஆர்.சி நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான வெற்றிகளுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது. முக ஸ்டாலின் அமைச்சரவையில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில், டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என கூறி பார் உரிமையாளர்கள் எம்.ஆர்.சி நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்கள் கைகளில் உள்ள பதாகைகளில், பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்; முதலமைச்சரின் நம்பி வாக்களித்தோம்; எங்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா….? என்றும், உங்களை நம்பி 3 லட்ச தொழிலார்களின் குடும்பங்கள் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்களை ஏலம் விடும் பொறுப்பை முக்கியப் புள்ளிகள் மூன்று பேர் எடுத்துள்ளதாகவும், இந்த ஏலத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 200 கோடி வரை லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஏலம் வெறும் கண் துடைப்பு நாடகமாக நடத்தப்படுகிறது எனவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் டெண்டர்களை முறைகேடாக ஒதுக்கியதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர்:
“தற்போது 41 டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது இதில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறையோ உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள நெறிமுறையோ பின்பற்றாமல் அவர்களுக்கு தேவையான நபர்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
டெண்டர் சமயத்தில் வழங்கிய விண்ணபங்களை கூட பார்க்காமல் முகம் தெரியாத நபர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது, ஏற்கனவே பார் வைத்துள்ள நபர்கள் இடத்தின் உரிமையாளர்களிடம் NOC பெற்று வைத்துள்ள பார் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்படாமல் டெண்டர் நடைபெற்றுள்ளது.

வெளியாட்கள் டெண்டர் போட வந்தால் அலுவலகத்திற்குச் செல்லவே போலீசார் அனுமதிப்பதில்லை என கூறிய அவர்கள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நபர்களின் தலையீடு அதிகமாக உள்ளது அரசு இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேர்மையான முறையில் மீண்டும் டெண்டர் நடத்தப்பட வேண்டும்” என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *