• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் உழவர் தின விழா கண்காட்சிக்கு அனைவரும் வாங்க..! முனைவர்.வெ.கீதாலட்சுமி..,

BySeenu

Sep 24, 2024

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நடைபெறுகிறது.

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.கீதாலட்சுமி..,

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு விவசாயிகளுக்கு வேளாண்மை விருதுகள் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டவர், இக்கண்காட்சியின் துவக்க விழாவில் மாநில உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் வேளாண் துறை முதன்மைச் செயலாளர், வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர்கள், வங்கி அதிகாரிகள் ஆகியவை கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக கூறினார்.

இந்த கண்காட்சியில் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வேளாண் விளைச்சல் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும், சிறு குறு விவசாயிகளுக்கான வங்கி கடன் செயல்முறைகள் குறித்தும், பயிர் காப்பீடு திட்டம், சுயதொழில் வாய்ப்பு, தொலைதூரக் கல்வி, தோட்டக்கலை ஆகியவை குறித்து உரிய விளக்கங்கள் வேளாண் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளால் அளிக்கப்பட உள்ளதாகவும், இக்கண்காட்சியினை பார்வையிட அனுமதி முற்றிலும் இலவசம் எனவும், நாள்தோறும் சுமார் 10,000 விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாய ஆர்வலர்கள், பொதுமக்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள், இணைப்பு கல்லூரிகள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விரிவாக்க சேவை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.