நியூகோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் இன்று அதிகாலை 3:30 மணியளவில் பயணித்தபோது, கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் பேருந்தில் இருந்து புகை எழுந்ததையடுத்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் உடனடியாக பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.

பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில், பேருந்தின் பேட்டரியில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் முன்கூட்டியே இறக்கிவிடப்பட்டதால், எந்தவித உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, பயணிகள் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.