மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு காலி மது பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் ,
மாநிலத் துணைச் செயலாளர் சாதிக் பாஷா மற்றும் அரியலூர் மாவட்ட இணை செயலாளர் இராம கொளஞ்சியப்பன் தலைமையில் அரியலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள், பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபான மொத்த விற்பனை கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் காலி மது பாட்டில்களை நாங்கள் திரும்ப பெற மாட்டோம் என வலியுறுத்தி, மது பாட்டில்களுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை திரும்ப ஒப்படைப்பதற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது;
இந்த காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் அதே சமயத்தில், இந்த திட்டத்தில் எங்களால் இந்த காலி மது பாட்டில்களை திரும்ப பெற இயலாது ஏன் என்றால், ஸ்கேனிங் செய்வது, பிஓசி மெஷின் போடுவது, மதுபானம் விற்பனை செய்வது, அட்டைப் பெட்டிகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிச்சுமைகள் இருப்பதால், எங்களால் இந்த காலி மது பாட்டில்களை திரும்ப பெற இயலாது.

எனவே இந்த திட்டத்தினை மறுசீரமைப்பு செய்து இந்த பணிக்கென மாற்றுப் பணியாளர்களை நியமனம் செய்தோ, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டோ, அல்லது பாட்டில் உற்பத்தியாளர்களே திரும்ப பெற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்பாடு செய்து இந்தத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் எனவும்,
எங்கள் மீது இந்த திட்டத்தை திணிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.
50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட நிர்வாக மேலாளர் அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.