புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள
பெரிய வயல்காட்டில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது ,
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அடையாளப்ப டுத்தப்படுத்தப்படாத தொண்டைமான் மன்னர்களின் கல்வெட்டுகளை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன் வழிகாட்டுதளுடன் கள ஆய்வு மேற்கொண்டு பதிவு செய்து வருகிறோம்,
அதன்படி ஆத்தங்கரைவிடுதி கல்விக்குக் கல்வெட்டு , கந்தர்வக்கோட்டை அருகே சம்மட்டிபட்டி பலகைத்தூண் கல்வெட்டு மற்றும் வாமன கோட்டுருவ நிலதானக்கல்,
கறம்பக்குடி ஆயிப்பட்டி சத்திரம் வாயிற் தூண் கல்வெட்டுகள், ஆகிய தொண்டைமான் ஆட்சிக்கால கல்வெட்டுகளை பதிவு செய்துள்ளோம்.

தற்போது அன்ன சத்திரத்திற்கான நில தான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொண்டைமான்களின் பொதுப்பணியை வெளிப்படுத்தும் முக்கியமான சான்றாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சத்திரங்கள் உள்ளன.
இவை தொண்டைமான் மன்னர்களின் சார்பில் கடந்த 300 ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப் பட்டது. வழிப்போக்கர்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இலவசமாக உணவு, நீர் உள்ளிட்ட வசதிகளுடன், தங்குவதற்கான வசதியும், கால்நடைகள் ஓய்வெடுப்பதற்கு தனியாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை அருகே இருக்கும் சின்னையா சத்திரம் அந்நாளில் திருமலைராயபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. ராகுநாதராய தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் இங்கு சத்திரம் அமைந்த பிறகு சின்னையா சத்திரம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
1788 ஆம் ஆண்டு – சின்னையாச் சத்திரத்தை மன்னரின் உறவினர் திருமலைத் தொண்டைமான் (சின்ன அரண்மனை ஜாகீர்தார்) நிறுவியதால் சின்ன அய்யா சத்திரம் என்றே அழைக்கப்பட்டு இவ்வூரின் பெயரும் அதே பெயரில் மாறியுள்ளதாக அறிய முடிகிறது .
இங்குள்ள கோவிலுக்கு வருகை தரும் பிராமணர்கர்களுக்கு இலவச உணவும் , ஏனைய சாதியினருக்கு சமைக்கத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது .
செனையக்குடி கல்வெட்டு:

திருமலைராய புரம் (சின்னையா சத்திரம்) சத்திரத்துக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள குளத்தூர் வட்டத்திலுள்ள செனையக்குடி வலையன் குளம், வயல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் வகையில், ஒரு புறம் வாமன கோட்டுருவமும்,மறுபுறம் கல்வெட்டு வாசகமாக
” திருமலை ராய புரம் அன்ன சத்திரத்துக்கு உ” என்றும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது .
இப்போதும் இந்நிலங்களில் விவசாயம் செய்வோர் பாரம்பரியமாக அந்நிலங்களை பாதுகாத்து வருகின்றனர்.
தொண்டைமான் ஆட்சியில் இதே போல 1779 ஆம் ஆண்டு ஆயிப்பட்டி சத்திரம், 1783 ஆம் ஆண்டு ஓணாங்குடி சத்திரம், வடவாளம் மேற்குப் பகுதி சத்திரம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டு தினமும் கடலைக் கூழ் மற்றும் மோர் வழங்கப்பட்டது , ஒவ்வொரு துவாதசி நாளிலும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதை ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.
பழங்கால வழிப்போக்கர்களுக்கான ஓய்விடமாக இருந்த இத்தகைய சத்திரங்கள், மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் உள்ளன. இவை முன்னூறு ஆண்டுகளாக பலருக்கும் இளைப்பாறவும் , ஓய்வெடுக்கவும், உணவருந்தவும், உதவிய கட்டுமானமாகும், நமது ஊரில் இருக்கும் இத்தகைய வரலாற்று சின்னங்களை பாதுகாக்க உள்ளூர் இளைஞர்களும் , தன்னார்வலர்களும், பொதுமக்களும் , உள்ளூர் நிர்வாகத்தினரும் சிறிய அளவில் பராமரிப்பு செய்தாலே சாலையோரம் செல்லும் பலரையும் ஈர்ப்பத்தோடு , நம் முன்னோர்களின் பெருமையையும் , நம் ஊர் பெருமையையும் காத்திட முடியும் என்றார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் ரெங்கராஜ் உடனிருந்தார்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் , சமூக ஆர்வலர் மாரிமுத்து ,கிராம நிர்வாக உதவியாளர் மாரிமுத்து, முருகேசன் , பெரண்டையாபட்டி திருநாவுக்கரசு வாசுதேவன் ஆகியோர் உதவினர்.




