• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவை அரசு கல்லூரி மருத்துவமனையின் வளர்ச்சி..,

BySeenu

Jun 15, 2025

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அண்மைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய மருத்துவத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.

கோவை அரசு மருத்துவமனையில் அபரிமிதமான வளர்ச்சி குறித்து பேசிய அவர்,

கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். குறிப்பாக, ₹ 9.65 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை இல்லாத அளவிற்குப் பல புதிய கட்டமைப்புகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேற்கு மண்டல மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், நாள்தோறும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை 2,500-லிருந்து 5,000 ஆக அதிகரித்து உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

புற்று நோயை துல்லியமாகக் கண்டறியும் நவீன கருவி முன்னதாக இரண்டு இடங்களில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிய கருவிகள் நிறுவப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், நான்கு இடங்களில் இக்கருவிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், தனியார் மருத்துவமனைகளில் ₹10-12 லட்சம் செலவாகும் இச்சிகிச்சை, தற்போது சென்னை எழும்பூர் மற்றும் சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ₹4-5 லட்சம் செலவில் பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டு உள்ளது. உலக அளவில் 15% தம்பதியினர் கருத்தரித்தலில் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், 15 பெண்களில் ஒருவருக்கு கருப்பைக் குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சூழலில், முதல் முறையாக கோவையில் முதல் நிலை கருத்தரித்தல் மையம் திறக்கப்பட்டு உள்ளது, ஒரு மைல் கல் என்றார். இங்கு 180 தாய்மார்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இருவர் கருவுற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன் மருந்து வழங்கும் திட்டம், முதல் கட்டமாக ₹13.25 கோடி மதிப்பீட்டில் கோவையில் தொடங்கப்பட்டு உள்ளது. இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சாலைகளில் பாதுகாப்பின்றி ஆதரவற்று இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வசதி அளிக்கும் திட்டம் 16 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் இத்திட்டம் படுக்கை வசதிகளுடன் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மனிதநேய நடவடிக்கையாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பற்றிய கேள்விக்கு,
நீட் தேர்வைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான செய்திகள் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து தீர்வு காண்பதற்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 1,35,716 பேர் பங்கேற்றதில், 76,181 மாணவர்கள் தகுதி பெற்று உள்ளனர். நாடு முழுவதும் முதல் 100 இடங்களில் ஆறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மாநிலத்திற்குப் பெருமை என அவர் கூறினார். நீட் மதிப்பெண் அடிப்படையில் விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் பணியிடங்கள் பற்றிய கேள்விக்கு,
சிறுவாணி பகுதியில் உள்ள மூன்று மலைக் கிராமங்களுக்கு 15-16 கிலோ மீட்டர் நடந்தே சென்று மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சீத்தம்பதி மலை கிராமத்தில் 53 வீடுகளில் வசிக்கும் 154 பேரில், 12 பேர் அரசின் மருத்துவ வசதியைப் பெற்று வருகின்றனர். முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ஒருவர் விபத்தில் காயம் அடைந்த போது, இத்திட்டம் மலை கிராமங்கள் வரை சென்று உள்ளதை வெகுவாகப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவத் துறையில் பற்றாக்குறை இல்லாமல் பணி இடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், மேலும் 9,000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

கோவையில் வசிக்கும் திருநெல்வேலி மாணவி நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி தொடர்பான கேள்விக்கு, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.