• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க கோரிக்கை

Byவிஷா

May 29, 2025

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி மருத்துவர் ரோடரிக்கோ எச்.ஆப்ரினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..,
இந்தியாவின் தென் பகுதியில் உள்ள பெரிய மாநிலம் தமிழகம். இந்த மாநிலம் 8 கோடி மக்கள் தொகை கொண்டது. உலக சுகாதார நிறுவனத்தின் நிர்ணயித்த 2030-ம் ஆண்டுக்கான இலக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, தமிழகம் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்து சாதனை படைத்துள்ளோம்.
தமிழகத்தில் தற்போது பேறுகால இறப்பை லட்சத்துக்கு 39 என்ற அளவில் குறைத்துள்ளோம். இறப்பை மேலும் குறைக்க வேண்டும் என்பதில் மருத்துவர்கள் முனைப்போடு பணியாற்றி வருகிறோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறோம்.
அதுவும் கிராம சுகாதார சேவையில் தமிழகத்தை முதல் மாநிலமாக நிலைநிறுத்தி வருகிறோம். ஆனாலும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மருத்துவர்கள் மட்டுமன்றி, மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியும், அரசு அதை செயல்படுத்தவில்லை. அதேபோல், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி ஊதிய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் இளம் வயதில் அரசு மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. மக்கள் வாழ்நாளை நீட்டிக்க முனைப்பு காட்டி வரும் அரசு மருத்துவர்கள் தங்கள் வாழ்நாளை தொடர்ந்து குறைத்து வருகின்றனர் என்பது தான் வருத்தமான உண்மை. மக்களின் சராசரி ஆயுட்காலம் 69 – 72 ஆகவும், மருத்துவர்களின் ஆயுட்காலம் 55 – 59 ஆகவும் உள்ளது.
எனவே, உலக சுகாதார நிறுவனம் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்க அரசை வலியுறுத்த வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் (அரசாணை 354 ன்படி அல்லது மத்திய அரசுக்கு இணையான) வழங்க அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணியாற்ற வழிவகுப்பதோடு, உயிர்காக்கும் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.