• Sun. Oct 13th, 2024

ஒமிக்ரானுக்கு இலவச மூலிகை மருந்து தரும் நாட்டு வைத்தியர் – படையெடுக்கும் பொதுமக்கள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாம்பட்டினம் எனும் கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தய்யாவை நினைவிருக்கிறதா?

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது இவர் உருவாக்கிய நாட்டு மருந்து, கொரோனா வைரஸ் தொற்றை அரை மணி நேரத்தில் குணப்படுத்துவதாக பேச்சு எழுந்தது. மேலும் அந்த மருந்தை அவர் லாபநோக்கம் இன்றி இலவசமாகவே மக்களுக்கு வழங்கி வந்தார்.

மேலும், தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியவர்கள் கூட இந்த மருந்து உட்கொண்டு நலம்பெற்று நடமாடத் தொடங்கினர். தனியார் மருத்துவமனைகளில் பல லட்ச ரூபாய் செலவிட்டு உயிரை காப்பாற்ற போராட்டம் நடத்த வேண்டிய நிலையில், ஆனந்தய்யாவின் மருந்தும் அதனுடைய அற்புத ஆற்றல் குறித்த தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த மருந்தை வாங்குவதற்காக கிருஷ்ணாம்பட்டினம் கிராமத்திற்கு படையெடுத்தனர். இதனால் சுமார் 5 – 6 கிமீ தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டு, அதனை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டாம் அலை பரவலின் போது ஆனந்தய்யா ஆபத்பாந்தவனாக திகழ்ந்தார்.

இவருடைய மருந்து குறித்து அறிந்து மாநில அரசே முன்வந்து பரிசோதனை நடத்தியதில் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. உள்ளூர் மக்களும் ஆனந்தய்யாவின் மருந்தை புகழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மாநில அரசு ஆனந்தய்யாவை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த நிகழ்வும் அரங்கேறியது.

தற்போது, ஒமிக்ரான் தொற்று வீரியமாக பரவி வரும் நிலையில் அனந்தய்யா மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார். ஒமிக்ரானை குணப்படுத்தும் மூலிகை மருந்தை இவர் தயாரித்து தற்போது பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இது குறித்து அறிந்த பொதுமக்கள் அக்கம்பக்கத்து கிராமங்கள், நகரங்களில் இருந்து அனந்தய்யாவிடம் இருந்து மருந்தை வாங்க கிருஷ்ணாம்பட்டினம் கிராமத்தில் குவியத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால் இம்முறை உள்ளூர் மக்கள் ஆனந்தய்யாவுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கின்றனர். இந்த புதிய மருந்தை பயன்படுத்த சுகாதாரத்துறையினரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பும் கிராம மக்கள், அதிகளவில் பொதுமக்கள் குவிவதால் தங்கள் பகுதியில் நோய்த்தொற்று பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஆனந்தய்யாவின் வீட்டு முன் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து கலைந்து போக வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *