• Fri. Apr 26th, 2024

காங். இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை

தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாத அணி குறித்த ஆலோசனை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியில் மம்தா, சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காகக் காங்கிரஸ் அல்லாத தலைவர்களை மம்தா பானர்ஜி ஏற்கனவே சந்தித்து இருந்தார். அதன் பின்னரே காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.

அதேபோல இதுநாள் வரை பாஜகவைக் கடுமையாக விமர்சிக்காமல் அமைதி காத்து வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வும் கடந்த சில நாட்களாக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். மேலும், தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அவர், நேற்றைய தினம் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு கூட்டணி அரசுக்குக் குழப்பம் ஏற்படுத்தலாம் எனக் கருதப்பட்டது. ஏனென்றால் காங். இல்லாத தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்கவே தெலங்கானா முதல்வர் கேசிஆர் முயன்று வருவதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் இல்லாமல் தேசிய அளவில் கூட்டணியை அமைக்க முடியாது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் மேலும் கூறுகையில், “திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அரசியல் கூட்டணியை அமைக்கலாம் எனக் கூறிய போது கூட, அதில் காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும் என முதலில் வலியுறுத்தி கட்சி சிவசேனா தான். காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (யுபிஏ) விரும்பாதவர்கள், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தெலங்கானா முதல்வர் கேசிஆர் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கத் தீவிரமாக முயன்று வருகிறார். அனைவரையும் அரவணைத்து அழைத்துச் சென்று வழிநடத்தும் திறன் கொண்டவராக கேசிஆர் உள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் மம்தா உடனான சந்திப்புக்குப் பின்னர் பேசும் போதும் சஞ்சய் ராவத் இதே கருத்தைத் தான் கூறியிருந்தார், அதாவது, “காங்கிரஸைத் தவிர்த்து தேசிய அளவில் ஒரு கூட்டணியை அமைப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ஆலோசித்து வருகிறார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியைத் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதும், அது இல்லாமல் UPAக்கு இணையான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதும் கிட்டதட்ட நடக்க முடியாது ஒன்று. இது ஆளும் பாஜக மற்றும் “பாசிச” சக்திகளை வலுப்படுத்துவதற்குச் சமம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *