• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் அளித்த புகார்..,

BySeenu

May 16, 2025

கோவை, பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகன்கள் என குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசித்து வருபவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவருமான மோகன்ராவ் ஷிண்டே என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இதன் இடையே மோகன்ராவ் ஷிண்டேவிற்கும் சாமுவேலுக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து சாமுவேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் வாடகை பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி வந்து உள்ளார். ஆனால் வீட்டின் உரிமையாளரான மோகன்ராவ் ஷிண்டே மற்றும் அவரது மகனான ஆகாஷ் இருவரும் அவ்வப் போது சாமுவேல் குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபடுவதும் சாமுவேலின் மகளான கல்லூரி மாணவியிடம் மோகன்ராவ் ஷிண்டேவின் மகன் ஆகாஷ் கிண்டல் கேலி மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை சாமுவேலின் மனைவி மட்டும் வீட்டில் இருந்த போது அவரது வீட்டின் முன்பாக மோகன்ராவ் ஷிண்டே ஒரு டிராக்டரில் கட்டிட கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளார். மேலும் சாமுவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் படி ஏறி வீட்டிற்கு செல்ல முடியாதபடி கட்டிட கழிவுகளைக் கொண்டு நிரப்பி சென்றுள்ளார். இதை அடுத்து சாமுவேல் கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ஏற்கனவே மோகன்ராவ் ஷிண்டே மற்றும் அவரது மகனான ஆகாஷ் என இருவரும் தங்கள் குடும்பத்திற்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்ததாகவும் குடியிருந்து வரும் வீட்டின் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றை துண்டித்து விட்டதாகவும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தால் காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தனது சகோதரியான கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்லும் பொழுது மோகன்ராவ் ஷிண்டேவின் மகன் ஆகாஷ் கிண்டல் கேலி செய்த போது அதனை தட்டிக் கேட்டதால் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார். எனவே தொடர்ந்து தங்கள் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் செய்து வரும் மோகன்ராவ் ஷிண்டே மற்றும் ஆகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.