• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதவாத அரசியல் வெறும் பேச்சு; திராவிடமே நம் உயிர் மூச்சு – ஓ.பன்னீர்செல்வம் ஓபன் டாக்

ByKalamegam Viswanathan

Mar 7, 2026

தாய் கழகமான திமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்துள்ளார்; மனமுவந்து வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை இணைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..,

இந்த மேடையில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் தாமதமாக இருந்தாலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருந்த தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே அவர் வந்திருக்கிறார் என்றார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தாம் மட்டுமல்ல, நானும் ரசிகன் தான் என்றும், கழகம் எம்.ஜி.ஆரை வளர்த்தது; எம்.ஜி.ஆரும் கழகத்தை வளர்த்தார் என்றும் தெரிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் இருந்த தாய் கழகத்திற்கே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திரும்பி வந்துள்ளதாக கூறினார்.

மேலும், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்யும் நிலைக்கு சென்றதால் உரிமைக் குரல் எழுப்பி தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளதாகவும், திராவிட பாதையில் தடம் மாறாமல் பயணிக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் பெயரை தாங்கிய இயக்கம் அவரது கொள்கைகளை மறந்து துரோகத்தின் உருவமாக மாறிவிட்டதால், அண்ணா தொடங்கிய இயக்கமான திமுகவிற்கு அவர்கள் திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

அண்ணா அறிவாலயம் என்பது சுயமரியாதையின் கோட்டையாகும் என்றும், அண்ணாவின் தம்பியாகவும், கலைஞரின் உடன்பிறப்பாகவும் அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், 2008ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதை நினைவுகூர்ந்த முதல்வர், அப்போது முரசொலி நாளிதழ் அவரை பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறினார்.

அதை சட்டமன்றத்தில் குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வத்திடம், பச்சைத் தமிழர் என்ற பட்டத்தை தந்தை பெரியார் காமராசருக்கு வழங்கியதாகவும், அதையே முரசொலி குறிப்பிட்டதாகவும் தலைவர் கலைஞர் விளக்கியதாக முதல்வர் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது ஓ.பன்னீர்செல்வத்தின் தனிச்சிறப்பு என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்துள்ளார்; மனமுவந்து வரவேற்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் வெறும் பேச்சு; திராவிடமே நம் உயிர் மூச்சு மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு..,

தேசியம் என்ற பெயரில் மதவாத அரசியல் தமிழ்நாட்டில் வெறும் பேச்சாகவே உள்ளது என்றும், இங்கு எப்போதும் திராவிடமே நம் உயிர் மூச்சாக இருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த நிகழ்வில் பேசிய அவர், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை மேற்கோள் காட்டி, தன்னையும் தன்னுடன் பயணித்தவர்களையும் அன்புடன் அரவணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை, பேரறிஞர் அண்ணாவின் அறிவு, முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் தமிழ்ப்பற்று மற்றும் அரசியல் ஞானம், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் விவேகம் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என்றும் அவர் புகழ்ந்தார்.

மேலும், திமுகவுடன் தாம் இணைந்தது சிலருக்கு வெறுப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இது எதிரணியின் வெற்றி வாய்ப்பை முற்றிலும் தடுத்துள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் திட்டம், மகளிர் இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 பேரில் 57 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் எனவும், இது தமிழக அரசின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னேறி இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர மக்கள் தயாராக உள்ளனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.