கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, எஸ்ஐஎச்எஸ் காலனி மேம்பால பணிகளை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நா.கார்த்திக்;-

நீலிக்கோணாம்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் உள்ள பல லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2010 ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராகவும், அன்றைய காலகட்டத்தில் துணை முதல்வராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நிதி ஒதுக்கப்பட்டு, இப்பகுதியில் இரயில்வே கடவு மேம்பாலம் கட்டும் பணிக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றது. முதற்கட்ட பணிகளான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு 2011 ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாழாய்போன அதிமுக ஆட்சியில் எந்த வித பணிகளையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதனால் எஸ்ஐஎச்எஸ் காலனி, நீலிக்கோணாம்பாளைம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நான் 2016 ம் ஆண்டில் இருந்து 2021 ம் ஆண்டு வரை இப்பகுதி பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சட்டமன்றத்தில் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பேசும்போது, இந்த மேம்பால பணியினை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் மேம்பால பணியினை கிடப்பில் போட்டனர்.

அதன்பிறகு 2021 ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பினை ஏற்று திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பினை ஏற்றவுடன், இந்த மேம்பாலத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையப்படுத்தப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு மற்றும் அன்றைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் இப்பணியினை வேகப்படுத்தினர். தற்போது, மேம்பால பணிகளில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கிட்டத்தட்ட 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் அவர்கள் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி, உதவி பொறியாளர் ஹரிபிரசாத், ஒண்டிப்புதூர் பகுதி கழக பொறுப்பாளர் கஸ்தூரி அருண், வட்டக்கழக செயலாளர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சின்னசாமி, கீதா செல்வராஜ்,தம்பு, கனகராஜ், சிவா,ஆ. சதீஷ் குமார்,கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.லட்சுமணன்,ஆர்.கே.கே.மணி,ஜவஹர், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.