• Fri. Apr 26th, 2024

கை நழுவி போகும் கோவை மாநகராட்சி?

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால் தி.மு.க.,வில் அதிருப்தி நிலவும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக்கி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்ற, எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூ., கட்சிகள், ம.தி.மு.க., கொங்கு கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் கோவை மாநகராட்சியில், 26 வார்டுகள் வரை தி.மு.க., ஒதுக்கியுள்ளது.

மீதமுள்ள, 74 வார்டுகளில் தி.மு.க., போட்டியிடுகிறது. ‘சீட்’ ஒதுக்கீடு முடிந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும்.

ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு ‘சீட்’ ஒதுக்கியதை ஏற்று கொள்ளாத தி.மு.க., கட்சியினர், மாவட்ட செயலாளர்கள் வீடுகளின் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்குதான் வார்டு ‘சீட்’ என்று உறுதியாக இருந்த கட்சியினர், கூட்டணிக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கள் கோபத்தை ஆர்ப்பாட்டம், முற்றுகை என்று வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேநேரம், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகிய பா.ஜ., தனித்து போட்டியிடுவதால், மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ முழுமையாக அ.தி.மு.க.,வே போட்டியிடுகிறது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இன்று, மீதமுள்ள அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

ஆளுங்கட்சியில் நிலவும் கூட்டணி ஒதுக்கீடு, ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி, எதிர்ப்புகளை தங்களுக்கு சாதகமாக்க அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

ஆளுங்கட்சியில் ‘சீட்’ கிடைக்காத நபர்கள், சுயேட்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் ‘சீட்’ கிடைக்காத நபர்கள், ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணியாற்றுவது கடினமே.இந்த காரணங்களால், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய வார்டுகளில், அ.தி.மு.க., தனி கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

இதனை செய்தாலே மாநகராட்சியில், 30 வார்டுகளை சுலபமாக ஜெயித்துவிடலாம் என்றும், இதுபோக, 20 – 25 ‘சீட்’ எடுத்தாலே கோவை மாநகராட்சி மேயர் நமக்குதான் என்று கணக்கு போட்டு, அ.தி.மு.க.,வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற துவங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *