• Fri. Apr 26th, 2024

காவிரி கடைமுக தீர்த்தவாரி திருவிழா
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காவிரி கடைமுக தீர்த்தவாரி இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
வழக்கம்போல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1-ந் தேதி துலா உற்சவம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் முக்கிய விழாவான திருக்கல்யாணம் தேரோட்டம் நேற்று(15-ந் தேதி) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கடைமுக தீர்த்தவாரி இன்று(16-ந் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கிய நிலையில், அங்கிருந்து சுவாமிகள் காவிரி கரையில் எழுந்தருளின. காவிரி கரையில் அஸ்திரதேவருக்கு பல்வேறு வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *