• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு, இந்தாண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

BySeenu

Jun 8, 2024

தமிழக அரசு நியமிக்க உள்ள மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு, இந்தாண்டு மருத்துவ பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு சேர்ந்து மருத்துவ பட்டம் படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு, பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்ற 146 மருத்துவர்கள், மற்றும் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் பயின்ற 88 மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவத்துறையில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்கள் நலனில் மிகச் சிறப்பாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். மு. க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து, மக்கள் நல்வாழ்விற்காக மருத்துவத் துறைக்கென கூடுதல் நிதி ஒதுக்கி புதிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். நகரப் பகுதியில் இருக்கக்கூடிய பெரிய மருத்துவமனைகளில் மட்டும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காமல், கிராம மக்களும் பயன் பெறும்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். உயிர் காக்கும் மருந்துகள், நாய் கடி மற்றும் பாம்பு கடிக்கு சிகிச்சை என கிராமப்புறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்களால், ஏராளமான மக்கள் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மருத்துவத் துறையில் காலியாக உள்ள 2553 மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்ப, ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என கூறிய அவர், நடப்பாண்டில் மருத்துவப் பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்களும் விண்ணப்பிக்க லாம் என்றார். உலகிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தான், செயற்கை கருத்தரித்தல் மையம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் கொண்டார். புதிதாக மருத்துவ பட்டம் பெற்றிருக்கும் மருத்துவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும்படி கேட்டுக் கொண்டார்.