• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா?- கோவையில் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனு…

BySeenu

Feb 1, 2024

கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக்கான நிதி உதவியை அளித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவச கல்வி என்று கூறி தங்கள் குழந்தைகளை சேர்க்க செய்து தற்பொழுது ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாகவும் இதனைக் கேட்க போனால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், ஆரம்பத்தில் பள்ளியில் இலவச கல்வி தருவதாக கூறி உறுதியளித்ததன் அடிப்படையில் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்ததாகவும், அப்போது 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்பட்ட நிலையில் பின்பு 300, 600, 900 என 1800 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததாகவும் 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறிபிட்டுள்ளனர். மேலும் 2024-25ம் கல்வியாண்டில் வெளிநாட்டில் இருந்து நிதி வரவில்லை என கூறி குறைந்தபட்சம் 30,000 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை கல்வி கட்டணம் கேட்பதாகவும் கட்டணத்தைச் செலுத்த இயலாவிட்டால் பள்ளியில் இருந்து TC யை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பள்ளி FCRA வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ள பெற்றோர்கள் இந்த பள்ளியின் கட்டண பில்லில் பள்ளி கட்டணம் 100 ரூபாய் என்று இருக்கும் நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் இந்த பள்ளியின் டிரஸ்ட் உரிமத்தை அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வர் சொர்ணலதாவை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மனு அளிக்க வந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.