• Fri. Apr 26th, 2024

பிராமண நிறுவனமும், சினிமாவும்..

காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற பெயர் கொண்ட சங்கராச்சாரியார் (மஹா பெரியவா) மிகச் சிறந்த படிப்பாளி அவர் அறுபதாண்டுகளுக்கு மேலாகப் பட்டத்தில் இருந்தார், தமிழ் அறிவுலமும், இந்திய இதழியல் உலகமும் உருவாகி வருகின்ற பொழுது, அவர் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் அதைத் தனக்கென வளைத்துக் கொண்டார். அதன் விளைவாக ஸ்மார்த்தப் பிராமணர்களின் சாதிக்கும் மதத்திற்கும் தலைவரான அவரை ஜகத்குரு (உலகத் தலைவர்) என அச்சு வழி ஊடகங்கள் (தினமணி. The Hindu) ஆரவாரம் செய்து ஏமாளித் தமிழர்களை நம்ப வைத்தன. அவரது பேச்சுக்களை தெய்வத்தின் குரல் என்ற பெயரில் திருநாவுக்கரசு செட்டியாரின் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலில் நாம், நாங்கள், நம்முடைய ஆகிய சொற்களெல்லாம் பிராமணர்களை மட்டுமே குறித்தனவையாகும். தமிழ் வாசகர்கள், நூற்றுக்கு நூறு ஏமாந்து போன இடத்தில் இதுவும் ஒன்றாகும்.

சுருக்கமாகச் சொன்னால் ஸ்மார்த்தப் பிராமணர்களின் ஒரு சிறு “பிரிவின் தலைவர் (பிராமண சாதித் தலைவர்களில் ஒருவர்) இந்தியாவின் ஆஸ்தான சாமியாக்கப்பட்டார். வேறு வகையில் சொல்வதானால் இந்திய ஆட்சி அதிகாரத்தில் தமிழ்நாட்டுப் பிராமணர்களின் செல்வாக்கு ஒரு பொய் மடத்தை அதிகார மையமாக்கியது, பிராமணர்கள் மட்டுமல்ல, ஜெயகாந்தன், வலம்புரி ஜான் போன்ற எழுத்தாளர்கள் கூட சங்கராச்சாரியாரைப் பற்றி எழுதியே தீர வேண்டும். பகுத்தறிவுப் பரம்பரையில் வந்த குங்குமம் போன்ற இதழ்கள் கூட இந்தச் சாமியாரின் படத்தைப் போட்டே ஆக வேண்டும். இந்த உண்மையான அதிகார மையத்தின் பெருமையினை கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், ஜூனியர் விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து ஆகிய பத்திரிகைகளும் தொடர்ந்து பரப்பி வரும். ஆனால் அதை மறைமுகமாகச் செய்யும். ஒட்டு மொத்த விளைவாகப் பிராமணர்கள் வாசனையே படாத குக்கிராமத்தின் கருப்பசாமி கோவில் திருவிழாப் பத்திரிகை கூட ‘காஞ்சி ஜகத்குரு அருளாணைப்படி என்று தான் அச்சடிக்கப்படுகிறது. இக்காலத்தில் வலிமையான மக்கள் தொடர்பு சாதனங்களில் சினிமாவும், பத்திரிகையும் அடங்கும். கலை இலக்கியத் துறைகளில் பார்ப்பனர்கள் செல்வாக்கைத் தூக்கிப் பிடிக்க இந்த இரண்டு நிறுவனங்களும் பெருந்துணை செய்கின்றன. இவர்களுக்குச் சினிமா என்றால் பாலசந்தர்,ஜீவி, மணிரத்தினம், கமலஹாசன், லெட்சுமி இவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். சிறுகதை, நாவல் துறை என்றால் குபரா. முதல் லா.ச.ரா வரை ஒரு நீண்ட பட்டியல் ஒப்பிப்பார்கள். பூமணி, பிரபஞ்சன், வண்ணதாசன், பா.செயப்பிரகாசம், கந்தர்வன் போன்ற பெயர்களெல்லாம் இவர்களது நினைவுக்கே வருவதில்லை. அதிலே தொட்டுக் கொள்கிற மாதிரி ஏதோ புதுமைப்பித்தன் பெயர் இருக்கும். அரைப் பிராமணர்களான அகிலன், ஜெயகாந்தன் பெயர்கள் கட்டாயம் இருக்கும். சமையல் குறிப்புகள் என்றால் தமிழ்நாட்டில் தெருவுக்கு ஒருவர் மட்டுமே புலால் உண்ணுவதால்! அதை விட்டு விட்டு சைவச் சமையல் பற்றித்தான் குறிப்பு இருக்கும். இசை நடனத் துறைகளை இவர்களே கண்டுபிடித்ததால் இவர்களை மீறி வெளியே வர மதுரை சோமுவும், சேலம் ஜெயலெட்சுமியும் பட்டபாடு அவர்கள் கும்பிட்ட கடவுளுக்கே வெளிச்சம். எம்.எஸ்.சுப்புலெட்சுமி போன்ற இசை மேதைகளைப் பிராமணர் அல்லாத குலத்தில் பிறந்தவர் என்று இன்று நம்புவார்களா? கல்கியும், ஆனந்த விகடனும் இந்த உண்மையை மறந்தும் கூட வெளிப்படுத்துமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *