16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகிவிட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், ஹரியானாவில் 2 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.மேலும் பாஜக சார்பில் நடிகர் ஜெக்கேஷ், லெஹர் சிங் ஆகியோரும் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார். இன்று அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தற்போது அதன் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. 4 மாநிலங்களில் மொத்தம் 16 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், 9 இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.