பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக நடக்க இருக்கிறது.
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்… முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கத்பந்தன் கூட்டணிக்கும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிகப்பட்டுவிட்டதால் தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளுமே இருக்கின்றன.
மொத்தம் 243 இடங்கள் கொண்ட பிகார் சட்டமன்றத்தில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வென்றது. அதிகப்படியான இடங்களை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்து தோற்றதால்தான், 2020 ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்று கருதுகிறார் தேஜஸ்வி. அதனால் இம்முறை காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவதில் கறார் காட்டுகிறார். ஆனால் காங்கிரஸ் 64 சீட்டுகள் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. அதனால் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. இரு தரப்பினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். காங்கிரஸிக்கு 50 என்பதை ஒட்டி சீட் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் அக்டோபர் 8 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் காணொலி வழியாகவே கலந்துகொண்டனர்.
கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்கலாமா என்று விவாதிக்கப்பட்டது. மேலும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிபிஐ-எம்எல், 19 இடங்கள் தருவதாக கூறிய ஆர்ஜேடியின் கோரிக்கையை நிராகரித்து 30 சீட்டுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பாக இடது சாரி தலைவர்களை தேஜஸ்வி யாதவ் தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பிகார் ஜார்கண்ட் எல்லையோர பகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் சில இடங்களை மகா கத்பந்தன் கூட்டணியில் கேட்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஆர்.ஜே.டி. குறைந்தது 140 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது.
தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பிணக்கு இருந்தாலும் விரைவில் முடிக்கு வரும் என்கிறார்கள் ஆர்.ஜே.டி. தலைவர்கள்.
அத்துடன் தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து இதுவரை காங்கிரஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதுவும் ஆர்.ஜே.டி.யினரை வருத்தம் கொள்ள வைத்துள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் என காங்கிரசே அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி விரும்புகிறார்.
மகா கத்பந்தனில் இப்படி என்றால்… ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் கடுமையான தொகுதிப் பங்கீடு மோதல் நடந்து வருகிறது.
அக்டோபர் 8 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர் பட்டியல் பற்றிய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொகுதிப் பங்கீடே இன்மும் முடியவில்லை.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இரண்டும் தலா 100–103 இடங்களில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியு 2020 சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களிலும், பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன.
இம்முறை கூட்டணிக் கட்சிகளின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த இரு கட்சிகளும் தங்கள் இடங்களை சிறிது குறைத்து, கிட்டத்தட்ட ஒரே அளவிலான எண்ணிக்கையில் போட்டியிடலாம் என்று செய்திகள் வருகின்றன.
ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வனின் லோக் ஜனசக்தி கட்சி 40 சீட் கேட்கிறது. 20–25 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) ஏழு அல்லது எட்டு இடங்களில் போட்டியிடலாம்.
இதையெல்லாம் விட காங்கிரஸ் கட்சிக்கு பிகாரில் எத்தனை சீட்டுகளை தேஜஸ்வி யாதவ் ஒதுக்கிறார் என்பதை அறிய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்.
பிகாரில் காங்கிரசை எப்படி நடத்துகிறார்களோ அதைப் பொறுத்துதான் வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை நடத்துவதற்கும் உத்தி வகுக்கப்படும் என்கிறார்கள் திமுக சீனியர்கள்.
எனவே பிகார் தேர்தல் ஒரு வகையில் தமிழ்நாடு தேர்தலோடு தொடர்புடையதுதான்.
