• Mon. May 20th, 2024

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆட்சியரகப் பகுதியில் தணிக்கை முகாம்

ByG.Suresh

May 9, 2024

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மைதானத்தில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய வாகனத்தணிக்கை முகாமை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் தொடக்கி வைத்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து முதற்கட்டமாக 146 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிசீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பான் கருவி புதுப்பிக்கப்பட்டு நடப்பில் இருப்பது, முதலுதவிப்பெட்டியில் மருந்துகள் இருப்பில் வைத்திருப்பது, வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகனத்தில் கண்காணிப்பு கேமரா போன்றவைகளை ஆய்வு செய்தனர். வாகனத்தணிக்கைக்கு வந்திருந்த ஓட்டுநர்கள் தங்களது பெயர் வில்லை பொருத்திய சீருடையுடன் வந்திருந்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியது: சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவகங்கை, திருப்பத்தூர், இளையான்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய 7 வட்டங்களில் உள்ள பள்ளிகளைச்சார்ந்த 279 வாகனங்கள் தணிக்கை செய்யப்படவுள்ளது.

அதில் முதற்கட்டமாக 69 பள்ளிகளைச் சேர்ந்த 146 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில், அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் கொண்டு வரப்பட்டிருந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் குறைகளைச் சரிசெய்து, வாகனத்தணிக்கைக்கு கொண்டு வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *