தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.
இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான மறுஏலம் 27.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார்.
ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏலத்தில் ஏலதாரர்கள் 7பேர் கலந்து கொண்டனர்.
ஏலத்தில் ராட்டினம் நடத்துவதற்கு ஏலத்தொகை ரூ.3 கோடியே 35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் ஏல நிர்ணய தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு ரூ.3 கோடியே 31 லட்சம் என கோவில் நிர்வாகம் சார்பில் ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த ஏலத்தொகைக்கு யாரும் கேட்க முன் வரவில்லை. அப்போது ஏலதாரர்கள் எந்திர ராட்டினம் இயக்க புதிய நேரம் நிபந்தனைகளை விதிக்காமல் கடந்த ஆண்டுகளை போல வழக்கம் போல் எந்திர ராட்டினம் இயக்க அனுமதி கொடுத்தால் கோயில் நிர்வாகம் நிர்ணயிக்கும் ஏலத்தொகைக்கு ராட்டினம் ஏலம் எடுக்க ஏலதாரர்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி டெண்டர் கவர் திறக்கப்பட்டது.
இதில் ஏலதாரர்களில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 60 லட்சம் என முருகன் என்பவர் கோரி இருந்தார்.
கோயில் நிர்வாகம் நிர்ணயித்த தொகையை விட குறைவான தொகைக்கு ஏலம் கோரி இருந்ததால் தேதி குறிப்பிடாமல் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான மறுஏலம் ஒத்திவைக்கப்பட்டது.







