புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை மறியல் செய்யப் போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக சிஐடியு சங்கம் அறிவித்திருந்தது. இந்த சாலை மறியலுக்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை தான் இந்த சாலை மறியல் நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பேரணியாக அங்கன்வாடி ஊழியர்கள் புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்றனர். அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சம் வழங்க வேண்டும்,
குடும்ப ஓய்வூதியமாக 9000 வழங்க வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பையும் முன் பருவக் கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக சென்றனர். அப்போது பழைய அரசு மருத்துவமனை வளாக நான்கு முனை சந்திப்பில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து காவல்துறையின் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மதியம் 2 மணிக்கு மேல் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.




