• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்

அமேசான்  நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாளுக்கு நாள் இணைய வர்த்தகம் பெருகிவருகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் விற்பனையானது கடந்த ஒருசில ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. அமேசானின் வர்த்தகத்தோடு சேர்ந்து அதன் நெகிழிப் பொட்டலங்களும் நதிகள் வழியே பயணித்துக் கடல்களை நிறைத்துக் கொண்டிருக்கின்றன.

கடல்களின் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் ஓஷியானா (OCEANA) என்ற அமைப்பு ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அமேசான் நெகிழித் தலையணைகள் (காற்றடைத்த நெகிழிப்பைகள்) பொட்டலங்கள் மட்டுமே உலகை 600 முறை சுற்றும் அளவுக்கு அதிகமாக சூழலில் கலந்திருக்கின்றன என்றும் 2020 ஆம் ஆண்டு மட்டும் அமேசான் உற்பத்தி செய்த நெகிழிப் பொட்டலங்கள் 10.66 மில்லியன் கிலோகிராம் என்றும் சொல்கிறது. இது ஒவ்வொரு 67 நிமிடமும் ஒரு டெலிவரி வேன் முழுதுமான நெகிழிக் குப்பையைக் கடலில் கொட்டுவதற்கு சமம்.

கவலைதரத்தக்க வகையில் அமேசானின் பெரும்பாலான நெகிழிப் பைகள் மறுசுழற்சி செய்யத்தக்கவை அல்ல என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது ஓஷியானா. 610 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும் அமேசான் வர்த்தக உலகத்தில் ஜாம்பவானான வால்மார்ட்டையே பெரும் வித்தியாசத்தில் முறியடித்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. அத்தோடு அதன் நெகிழிக் குப்பைகளும் ஒரே ஆண்டில் 29 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.

சூழலுக்குப் பாதுகாப்பான மாற்றுகள் கைவசம் இருந்தும் தனது இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அமேசான் செயல்படுகிறது என குற்றம் சாட்டுகிறது ஓஷியானா. மறுசுழற்சி செய்யத்தக்கப் பொட்டலங்கள் திருப்பி செலுத்தத்தக்க மறுபயன்பாட்டுக்குரிய (Returnable and reusable) பொட்டலங்கள் அமேசானின் நெகிழி மாசுபாட்டை வெகுவாகக் குறைக்கும் என்கிறது ஓஷியானா.

ஜெர்மனியில் அமேசான் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை பயன்படுத்தி ஆண்டுக்கு பலநூறு மில்லியன் பார்சல்களை அனுப்புகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தில் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் அமேசான் நெகிழிக் குப்பை விஷயத்திலும் உலகுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கோருகிறது ஓஷியானாவின் அறிக்கை.

முழுமையான அறிக்கையை வாசிக்க https://oceana.org/reports/amazon-report-2021/