சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 7 விமானங்கள், 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள், விமானங்கள் சென்னைக்கு வரும் நேரங்களை மாற்றி அமைத்து, பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து, தாமதமாக இயக்குகின்றன.
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வந்தன. கடந்த சனிக்கிழமை மிகப்பெரிய அளவில் பனிமூட்டம் இருந்ததால் 10 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு சென்று தரை இறங்கின. அதோடு 48 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
இதை அடுத்து சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள், அதிகாலை நேரத்தில் சென்னைக்கு விமானங்களை இயக்குவதை தவிர்த்து, விமான பயண நேரங்களை மாற்றி அமைத்து இயக்கி வருகின்றன.
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு காலை 6.30 மணிக்கு வரவேண்டிய, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக காலை 9 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, வழக்கமாக காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு புறப்பட்டு செல்லும் அந்த விமானம் இன்று காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.
அதைப்போல் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு காலை 7.25 மணிக்கு, வந்துவிட்டு மீண்டும் காலை 8.05 மணிக்கு, கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் விமானம், இன்று காலை 8.30 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து காலை 9.10 மணிக்கு, கோலாலம்பூர் புறப்பட்டு செல்கிறது.
அதைப்போல் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து காலை 8.45 மணிக்கு வரவேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.45 மணிக்கு, சென்னைக்கு வருவது போல் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பனிமூட்டம் காரணமாக வேறு விமான நிலையங்கள் சென்று தரை இயங்குவதை தவிர்ப்பதற்காக, இதை போல் தற்காலிகமாக சில நாட்களுக்கு பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு முன்னதாகவே விமான நேரங்கள் மாற்றங்கள் குறித்து தகவல்கள் தெரிவித்து விட்டதால், பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை சென்னை விமான நிலையம் பகுதியில் ஓரளவு பனிமூட்டம் இருந்தாலும் பெரிய அளவில் விமான சேவைகள் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் இன்று காலை சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான விஜயவாடா, அந்தமான், சூரத், டெல்லி, கோவை, துபாய் உள்ளிட்ட 7 விமானங்கள் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

