சென்னையில் இருந்து இலங்கைக்கு 154 பேருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
அதன்பின்பு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று 5.45 மணிக்கு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 148 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 154 பேர் இருந்தனர். இந்த விமானம் அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட வேண்டியது சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக, காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை, வானில் பறக்கச் செய்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக ஓடுபாதையில் அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, ஓடுபாதையில் பழுதடைந்து நின்ற விமானத்தை, இழுத்து கொண்டு வந்து, விமானம் புறப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு, விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 7.40 மணிக்கு, மீண்டும் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் பயணித்த 148 பயணிகள் உட்பட 154 பேர் நல்வாய்ப்பாக தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில், இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.