

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோருடன் இணைந்து நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் படமொன்றை இயக்கப்போவதாகவும், விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப்போவதாகவும் பல செய்திகள் வெளியானது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் பாலிவுட்டின் பிரபலமான மூன்று கான்களை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவரும் முன்னணி கதாபாத்திரத்திலும், அமீர் கான் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. பாலிவுட்டின் மெகா நட்சத்திரங்கள் ஒன்றாக இணையப்போகும் இந்த செய்தி பாலிவுட் ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது பெரிய கதாநாயகனாக சிம்பு உருவாகியுள்ளார், இடையில் இவரது படங்கள் அவ்வளவாக வெற்றிபெறாமல் போனது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மூலம் சிம்பு மாஸாக கம்பேக் கொடுத்ததிலிருந்து அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியினைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்புவிற்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. தற்போது இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் செப்டம்பர்-15ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனையடுத்து, கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த திட்டத்தில் சிம்பு நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
