• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை..,

BySeenu

Apr 9, 2025

குடலுக்குள் உருவாகும் பாலிப்(Polyp) எனும் கேன்சருக்கு முந்தைய கட்டிகள் அண்மை காலங்களாக அதிகமானோருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த 29 வயதான இளம்பெண்ணின் பெருங்குடலில் உருவாகி இருந்த பெரிய அளவிலான பாலிப் கட்டியை கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள VGM(தனியார்) மருத்துவமனை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி முறையில் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.

சுமார் 7 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் பெண்ணின் பெருங்குடல் பகுதியில் இருந்து 8 செமீ அளவிலான பாலிப் கட்டி அகற்றப்பட்டுள்ளது. தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்ட பாலிப் கட்டிகளிலேயே இது தான் மூன்றாவது பெரிய கட்டி என கூறப்படுகிறது.

இந்த சிகிச்சை குறித்தான செய்தியாளர் சந்திப்பு VGM மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் எண்டோஸ்கோபி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த பாலிப் கட்டியின் அபாயம் குறித்தும் எண்டோஸ்கோபி சிகிச்சை குறித்தும் எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவக்குழுவினர், இங்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு அந்த பாலிப் கட்டியானது கேன்சர் கட்டிகளாக மாற்றம் அடையாததால் எண்டோஸ்கோபி முறையில் இதனை அகற்றியதாகவும் தற்போது அந்த பெண் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

பெருங்குடல் தொற்று நோய் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 20% உயர்ந்துள்ளதாக கூறிய மருத்துவர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகம் இதனால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மலத்தில் ஏற்படும் மாற்றம், மலத்துவாரத்தில் இரத்தில் வெளியேறுதல், அனீமியா, வயிற்று வலி, ஒவ்வாமை, டைரியா, அதிகப்படியான வாந்தி ஆகியவை இதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனவும், இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் பெருங்குடல் தொற்று நோயை தடுக்கலாம் என்றனர். இது மரபணு மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்து உருவாகிறது எனவும் இதனை ஒரு இடத்தில் இருந்து அகற்றி விட்டால் அந்த இடத்தில் மீண்டும் வராது ஆனால் வேறு இடத்தில் வரும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

வருடம் ஒருமுறை அனைவரும் FIT எனப்படும் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என தெரிவித்தனர். நாம் அனைவரும் மேற்கத்திய உணவு முறைக்கு மாறியதும் அதிக அளவிலான கொழுப்புகள் நிறைந்த இறைச்சி உணவுகளை உட்கொள்வது போன்றவற்றாலும் உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவை மேற்கொள்ளாமல் இருப்பதாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர். நம்முடைய உணவுப் பழக்கங்கள் மாறுவதற்கு ஏற்ப இது குறித்தான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும் என கூறினர்.

மேலும் பழைய சோறு ஊரவைத்த தண்ணீர், வெந்தயம், நீர்மோர் குடித்தாலே பெருங்குடலில் நன்மைதரும் பாக்டீரியாக்கள் உருவாகிறது என்றும் அந்த பாக்டீரியா பெருங்குடல் கேன்சரை தடுக்கும் என அமெரிக்கா பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாகவும், கூறிய மருத்துவர்கள் நம்முடைய முன்னோர்கள் உட்கொண்ட உணவுகளை நம் எடுத்துக் கொண்டாலே இது போன்ற பிரச்சனைகள் வராது என்று தெரிவித்தனர்.