• Wed. May 1st, 2024

‘லால்சலாம்’ திரைப்படத்தில் ஏ1 தொழில்நுட்பம்

Byவிஷா

Feb 3, 2024

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏ1) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரை ‘திமிரி எழுடா’ என்ற உத்வேகமூட்டும் பாடலைப் பாட வைத்துள்ளார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான். இது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? நீண்டகாலமாக தன்னுடன் பணியாற்றும் கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏ1) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரஹ்மான் இவ்வாறு செய்துள்ளார்.
பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன் மூன்றாம் தலைமுறை இசைக்கலைஞர் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் ‘ரங் தே பசந்தி’யில் இணைந்து இருபதாண்டுகளாக ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்.
இசைக்கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதோடு, பிட்ச் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனத்தையும் கிருஷ்ண சேத்தன் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த முன்னோடி இசை மென்பொருள் நிறுவனம் அதன் புதுமையான தயாரிப்புகளுக்காக பல சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டைம்லெஸ் வாய்சஸ் குறித்து கிருஸ்ஹ்ன சேத்தன் கூறுகையில், “பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து ‘திமிரி எழுடா’ பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷா{ஹல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது,” என்றார்.
கிருஷ்ண சேத்தன் மேலும் கூறுகையில்: “குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும். உலகெங்கும் உள்ள இசை நிறுவனங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை அவர்கள் எளிதில் அணுக முடியும். பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்,” என்றார்.
“கலைஞர்களுக்கு முன்னுரிமை” என்ற அணுகுமுறையுடன், கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். “கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் தேவைகளை ஆதரிப்பதன் மூலமும் நாங்கள் வளர விரும்புகிறோம்.” என்று கிருஷ்ண சேத்தன் தெரிவித்தார்.
‘லால் சலாம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிரி எழுடா’ பாடல் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், கிருஷ்ண சேத்தனின் டைம்லெஸ் வாய்சஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக பழம்பெரும் குரல்கள் மீண்டும் உயிர்த்தெழுவதையும், இளம் கலைஞர்கள் சாதனைகள் படைப்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *