கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மதுக்கரை, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகளை நடமாட்டம் காணப்படுகிறது.
கோடை காலம் முடிந்து தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வனப்பகுதியில் புற்கள் முளைக்க துவங்கி உள்ளதால், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள் வனப்பகுதிக்குள் கிடைத்து வருகிறது.

எனினும் ஒரு சில யானைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அங்கு உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தியும் பயிர்களை சாப்பிட்டும் வருகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியில் ஒற்றை யானை சுற்றி வருகிறது. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து அங்கு செல்லும் யானை வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும், ரேஷன் அரிசி மற்றும் மாடுகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறது.
இந்நிலையில் வடவள்ளி, மருதமலை பகுதியில் உள்ள ஐ.ஓ.பி காலனியில் நேற்று இரவு 9:30 மணி அளவில் வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை நகரத்தை ஒட்டி உள்ள அப்பகுதியில் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் யானை தாக்கி யாசகம் எடுத்து வந்த முதியவர் பலியான சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் அப்பகுதியில் ஏற்படும் முன்பு வனத்துறையினர் அங்கு வரும் ஒற்றை காட்டு யானையை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.