• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவணம் கட்டி கொண்டு திருவோடு ஏந்தி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியால் பரபரப்பு…

BySeenu

Feb 12, 2024

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை நிர்வாகி உட்பட அக்கட்சியினர் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து, விசாரணை முடிந்த பிறகும் பட்டா வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல செயலாளர் சுசி.கலையரசன் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவருடன் சுமார் 10க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முன்வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுசிகலையரசன், வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதன் காரணமாகவே கோவனம் கட்டி, திருவோடு ஏந்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்தப் போராட்டம் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து என்றும் கூட்டணிக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.