• Fri. Sep 29th, 2023

இடதுசாரி கருத்தை பேசும் புது வேதம் – திருமாவளவன்

Byதன பாலன்

Jul 12, 2023

விட்டல்‌ மூவிஸ்‌ தயாரித்து விரைவில்‌ திரைக்கு வரவிருக்கும்‌ படம்‌ ‘புது வேதம்’‌. இந்தப் படத்தில்‌ ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்திருந்த சிறுவர்களான விக்னேஷ்‌, ரமேஷ்‌ வருணிகா, சஞ்சனா மற்றும் இமான்‌ அண்ணாச்சி, சிசர்‌ மனோகர்,‌ 2 ரூபாய்‌ டாக்டர்‌ ஜெயச்சந்திரன்‌ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்தப் ‘புது வேதம்’ படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் பேசும்போது,

“இந்தப் ‘புது வேதம்’ படத்தை இயக்குநர் ராசா விக்ரம் எனக்கு திரையிட்டு காட்டினார். முழுமையாக பார்த்தேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரியை அடிப்படையாக கொண்டு இப்படத்தை.இயக்கியிருக்கிறார்.
இமான் அண்ணாச்சி பேசும்போது. “எல்லோரும் இப்போது சமுதாயத்தை அடிப்படையாக கொண்டு மேல் தட்டு, கீழ் தட்டு என்று படம் எடுக்கிறார்கள்” என்ற வருத்தத்தை சொன்னார். அப்படிப்பட்ட இத்திரையுலகத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்துடன் படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். ராசா விக்ரம் போன்றவர்கள் ‘சாதி வேண்டாம்.. மதம் வேண்டாம்.. எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்போம்’ என்ற ஐய்யன் திருவள்ளுவர் சொன்னதைக் காட்சிப்படுத்தும் புரட்சிகரமான, முற்போக்கான சிந்தனையாளர்களும் திரையுலகில் இருக்கிறார்கள். அதுதான் நமக்கு பெருமையையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. ஆறுதலை அளிக்கிறது.


இந்த இயக்குநரின் பார்வை இடது சாரி பார்வையாக இருக்கிறது. முற்போக்கு பார்வையாக இருக்கிறது. ஜனநாயக, சமத்துவ பார்வையாக இருக்கிறது. எளிய மக்களை உற்று நோக்குகிற ஒரு பார்வையாக இருக்கிறது. அலட்சியப் படுத்தப் பட்டவர்கள் மக்களாகவும் நடத்தப்படவில்லை என்ற பார்வை இயக்குநரிடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. ஒருபுறம் சாதி பெருமை பேசுபவர்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறவர்களாக இருந்தாலும் அய்யன் திருவள்ளுவர், அவ்வை பிரட்டி, சித்தர் பரம்பரையை சேர்ந்தவர்கள் வள்ளலார், அய்யா வைகுண்டநாதர், ஶ்ரீ நாராயண குரு, பசவையா, புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு நாம் சிந்திக்கிறோம்.

மனித குலத்தைக் தாண்டி பிற உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் அதுதான் கருணை. அதைத்தான் வள்ளலார் ‘தனிப்பெரும் கருணை’ என்றார். ‘எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு’ என்ற ஆன்ம நேயத்தை போதித்தவர் வள்ளலார். காலம் நமக்கு அவ்வப்போது வள்ளலார்களை தந்து கொண்டேயிருக்கும்.

திரைத்துறையில் எத்தனை ஜாதி வெறியர்கள் வந்தாலும், மத வெறியர்கள் வந்தாலும், எப்படி படம் எடுத்தாலும் சமூகத்தை எப்படி பாழ்படுத்த நினைத்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்கிற சிந்தனையாளர்களை, இந்த சமூகம் தந்து கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் வள்ளலார் கிடைத்தார். இந்தக் காலத்தில் தந்தை பெரியார் கிடைத்தார். அம்பேத்கர் கிடைத்தார். அவர்கள் தந்த கொள்கைகள் நம்மை வழி நடத்துகின்றன என்பதற்கு சான்றாக இயக்குநர் ராசா விக்ரம் இருக்கிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’. அதுதான் ‘புது வேதம்’. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று சொல்வது வருமானத்துக்காக அல்ல… லாபத்துக்காக அல்ல.. வருமானத்துக்காக படம் எடுக்க வேண்டுமென்றால் வேறு மாதிரி படம் எடுக்கலாம்.

ஆனால், திரையுலகம் வாயிலாக முற்போக்கான அரசியலை மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்து சமூகத்தில் கவனிக்கப்படாத சமூகத்தினர் குப்பை பொறுக்கும் மனிதர்கள் பற்றிய கதையாக இது உருவாகி உள்ளது.

வீடு இல்லாதவர்கள் இந்தியாவில் பல கோடி பேர் இருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் பிளாட்பாரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் நாம் இந்தியாவை வல்லரசாக்க போராடிக் கொண்டிருக்கிறோம். முதலில் நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வசிக்க வீடு இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

வீடில்லாமல் வாழ்பவர்களில் குப்பை பொறுக்குபவர்களின் கதையை இந்த புது வேதம் படத்தில் கூறியிருக்கிறார் இயக்குநர். அவர்களுக்கு சாதி கிடையாது அவர்கள் உழைக்கும் தொழிலாளர்கள்.

உலகம் முழுவதும் இரண்டே சமூகம்தான் உள்ளது. அதிகாரமுள்ள சமூகம், அதிகாரம் இல்லாத சமூகம். அதிகாரத்தோடு தொடர்பு இல்லாதவர்கள் நசுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படு கிறார்கள். அதிகாரம் படைத்தவர்களுக்குள் சாதி பேதம் இருக்காது. அங்கு எல்லோரும் ஒன்றாக ஒரு உடன்பாடோடு இணைந்திருப்பார்கள்.

உடல் உழைப்பே இல்லாமல் ஒரு சமூகம் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப சமுதாய அமைப்புதான் இங்கு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், எல்லா உயிர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இடது சாரி சிந்தனை. அத்தகைய சிந்தனையோடு உருவாகியிருக்கும் இந்தப் ‘புது வேதம்’ திரைப்படம் பெறும் வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed