நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிறு சிறு கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருவதால், மெகா கூட்டணி உருவாகி வருகிறது.
சிறு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 அணிகளில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள சிறு கட்சிகள் பலவும் அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றன. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முத்தரையர் சங்கம், மனித உரிமைகள் கழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தவிர 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்த ஜோதிகுமார், தனது கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றிரவு சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினர். அப்போது மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். மேலும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளனர். சிறு சிறு கட்சிகளும் அதிமுகவைத் தேடி வருவதால், அதிமுகவில் மெகா கூட்டணி மலர்வதற்கான வாய்ப்பு அமையும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.