• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

வீர சுவர்க்கத்தை நோக்கி விரைந்து செல்லும் குதிரை வீரன்

ByA.Tamilselvan

Jul 25, 2022

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் விவசாய நிலத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான குதிரை வீரன் சிற்பம் மற்றும் போர் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளன.

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் , முனைவர் இலட்சுமண மூர்த்தி ,ஆதி பெருமாள்சாமி ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது தனியார் விவசாய நிலத்தில் தனிப்பலகைக் கல்லில்
கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் மற்றும் போர் வீரன் நடுகற்கள் கண்டறியப்பட்டன.

இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது

பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் வணிக பாதை செல்லும் முக்கியமான ஊர் பேரையூர்.இவ்வூர் ஆரம்பத்தில் கடுங்கோ மங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் ஆதிகால மனிதனின் வாழ்விடம், பாறை ஓவியம், முதுமக்கள் தாழி, பாண்டியர் கால கல்வெட்டு , மற்றும் நாயக்கர் கால நடுகற்கள் காணப்படுகின்றன.

குதிரை வீரன் சிற்பம்

பேரையூர் மொட்டமலை அருகே தனியார் விவசாய நிலத்தில் தனிப்பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. குதிரை வீரன் நடுகல் 6 அடி உயரம், 3 அடி அகலமும் கொண்டுள்ளது. நடுகல்லில் வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாய்ந்து செல்கின்ற குதிரையும் அதில் அமர்ந்து ஈட்டியை ஓங்கிப் பிடித்துள்ள வீரனும் , நம்முடைய கண்ணையும் , கருத்தையும் கவர்கின்றனர் .வீரனின் இறுகிய காலும் , ஒட்டிய வயிறும் , விரிந்த மார்பும் , காலில் அணிந்துள்ள கழலும் , வீரன் இடுப்பிலுள்ள குறுவாளும் அவன் ஒரு வீரன் என்பதை பறை சாற்றுகின்றன. வளர்ந்த காதுகளும் , சிறிய கொண்டையும் அன்றைய நாகரிகத்தை சொல்லுகின்றன . வீரனின் கண்களில் தெரியும் உறுதியும் அதற்கு இனையாக குதிரையின் கண்களில் தெரியும் உறுதியும் எதிரிகளை மிரட்டுகின்றன.குதிரையின் மேலே விரிக்கப்பட்டுள்ள சேனத்தின் எளிமையான அலங்காரம் நம்மை வசீகரிக்கின்றன.குதிரையின் புடைத்த காதும் மேலே தூங்கிய வாலும் குதிரை செல்லும் வேகத்தை நமக்கு உணர்த்துகின்றன .

குதிரை வீரனுக்குப் பின்னர் மூன்று பெண்கள் வரிசையாக நிற்கின்றனர்.முதலில் நிற்கும் பெண் கையில் செண்டு ஏந்தியிருப்பதால் வீரனின் மனைவி என்றும், உடன்கட்டை ஏறியவள் என்றும் அறிய முடிகிறது. மற்ற இருவரும் பணிப் பெண்கள் , நடுவிலுள்ள பெண் அரச சின்னத்தை இரு கைகளினால் ஏந்தி கொண்டு நிற்கின்றாள் , கடைசியிலுள்ள பெண் ஒரு கையை இடுப்பில் தாங்கி மறு கையால் கவரி வீசுகின்றாள். மனைவி மட்டும் பாதம் வரை ஆடை அணிந்திருப்பதும், பணிப்பெண்கள் கால் முட்டி வரை மட்டுமே ஆடை அனிந்திருப்பதும் கவனிக்கத்தக்கவை. ஆனால் மூன்று பேருமே மார்பில் கச்சு அனிந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

முனைவர் து முனீஸ்வரன்
முனைவர் இலட்சுமண. மூர்த்தி

போர் வீரன் சிற்பம்

குதிரை வீரன் சிற்பம் அருகில் உள்ள போர்வீரனின் புடைப்புச் சிற்பம் 3 அடி உயரம் 2 அடி அகலமும் கொண்டுள்ளது. வீரன் இடுப்பில் குறுவாளுடனும், வலது கையில் உயர்த்திய வாளுடன், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடன் நின்றவாறு காட்சி தருகிறான்.

இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரை வீரன் மற்றும் போர் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு சிற்பங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சில குறிப்பிட்ட இன மக்கள் குல தெய்வமாக இந்த நடுகற்களை வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகற்கள் ஹொய்சாளர் கலைப்பாணியில் அமைந்துள்ளதால் கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.